Lifestyle and human interest
‘வந்தே மாதரம்’ தேசிய பாடல் விவகாரம் காங்., – தேசிய மாநாட்டு கட்சி ‘லடாய்’
ஜம்மு: ‘வந்தே மாதரம்’ தேசிய பாடல் விவகாரத்தில், ஜம்மு – காஷ்மீரில் ஆளும் தேசிய மாநாட்டு கட்சிக்கும், அதன் கூட்டணி கட்சியான காங்கிரசுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
‘அரசு நிகழ்ச்சிகளில், தேசிய பாடலான வந்தே மாதரத்தின் அனைத்து பத்திகளையும் கட்டாயம் பாட வேண்டும்’ என, மத்திய பா.ஜ., அரசு உத்தரவிட்டுள்ளது. எனினும், இந்த விவகாரத்தில் காங்., முரண்டு பிடிக்கிறது. ‘வந்தே மாதரத்தின் முதலிரண்டு பத்திகளை மட்டுமே பாடுவோம்’ என, அக்கட்சி அடம்பிடிக்கிறது.
யூனியன் பிரதேசமான ஜம்மு – காஷ்மீரில், முதல்வர் ஒமர் அப்துல்லா தலைமையில் தேசிய மாநாட்டு கட்சியின் ஆட்சி நடக்கிறது. இக்கட்சி உடன், காங்., கூட்டணியில் உள்ளது. எனினும், அமைச்சரவையில் காங்., இடம்பெறவில்லை.
இந்த சூழலில், ஸ்ரீநகரில், ஜம்மு – காஷ்மீர் சர்வதேச திரைப்பட விழா சமீபத்தில் நடந்தது. இதில், வந்தே மாதரம் பாடல் முழுமையாக பாடப்பட்டது. இதற்கு கூட்டணி கட்சியான காங்., எதிர்ப்பு தெரிவித்தது. இது குறித்து, காங்., மூத்த தலைவரும், அக்கட்சியின் லோக்சபா எம்.பி.,யுமான கே.சி.வேணுகோபால் கூறுகையில், ‘‘வந்தே மாதரம் பாடலின் அனைத்து பத்திகளையும் பாடுவது, நம் பன்முகத்தன்மையை கேள்விக்குள்ளாக்குகிறது. பாடல் வகுப்புவாதமாக்கப்படுவதை தவிர்க்கவே, முதலிரண்டு பத்திகள் தேர்ந்தெடுக்கப்பட்டன. அனைவரையும் உள்ளடக்கிய தன்மையை பேண அதை நாம் கடைப்பிடிக்க வேண்டும்,’’ என்றார்.
இதற்கு பதிலளித்த தேசிய மாநாட்டு கட்சியின் மூத்த தலைவர் பஷிர் அகமது, ‘‘வந்தே மாதரம் பாடலை எப்படி பாட வேண்டும்; எவ்வளவு பாட வேண்டும் என, எங்களை யாரும் கட்டுப்படுத்த முடியாது. கருத்து சொல்ல காங்கிரசுக்கு உரிமை உண்டு. ஆனால், அக்கட்சியின் விருப்பத்தை எங்கள் மீது திணிக்க முடியாது. என்ன செய்ய வேண்டும் என்பது எங்களுக்கு தெரியும்,’’ என்றார். வந்தே மாதரம் விவகாரத்தில், தேசிய மாநாட்டு கட்சி – காங்., இடையேயான மோதல், ஜம்மு – காஷ்மீர் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், ஸ்ரீநகரில் நேற்று நடந்த விழாவில், ஜம்மு – காஷ்மீர் மற்றும் லடாக் உயர் நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக புஷ்பேந்திர சிங் பாத்தி பதவியேற்றார். இந்நிகழ்ச்சியில், முதல்வர் ஒமர் அப்துல்லா, அவரது தந்தையும், தேசிய மாநாட்டு கட்சியின் தலைவருமான பரூக் அப்துல்லா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
விழாவின் துவக்கத்திலும், முடிவிலும், வந்தே மாதரம் பாடல் முழுமையாக பாடப்பட்டது. அப்போது, முதல்வர் ஒமர் அப்துல்லாவும், அவரது தந்தை பரூக் அப்துல்லாவும் பாடல் முழுமையாக பாடி முடிக்கப்படும் வரை எழுந்து நின்று மரியாதை செலுத்தினர்.
இதன் மூலம், வந்தே மாதரம் விவகாரத்தில் தங்களது உறுதியான நிலைப்பாட்டை அவர்கள் எடுத்துரைத்தனர். காங்கிரசின் வற்புறுத்தல்களுக்கு பணிய மாட்டோம் என்பதையும் மறைமுகமாக கூறி உள்ளனர். இதனால், தேசிய மாநாட்டு கட்சி மீது காங்., அதிருப்தியில் உள்ளதாக கூறப்படுகிறது.