பேனர் வைப்பதில் தகராறு விவசாயி குத்தி கொலை
பாபநாசம்: பேனர் வைத்த தகராறில், விவசாயி தளபதி, 60, என்பவர், கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார்.
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம், சத்தியமங்கலத்தை சேர்ந்தவர் தளபதி. இவரது மகன் சேதுபதி, 24. அதே பகுதியை சேர்ந்தவர் மதியழகன், 58. இவரது மகன்கள் பிரகாஷ், 28, ராஜ்குமார், 30.
சத்தியமங்கலத்தில் உள்ள காளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவுக்கு பேனர் வைப்பது தொடர்பாக, நேற்று முன்தினம் இரவு, தளபதிக்கும், மதியழகனுக்கும் தகராறு ஏற்பட்டது.
ஆத்திரமடைந்த மதியழகன், ராஜ்குமார், பிரகாஷ் ஆகியோர், நேற்று அதிகாலை தளபதி வீட்டிற்கு சென்று, அவரை கத்தியால் குத்தி, தப்பினர். பலத்த காயமடைந்த தளபதி, பாபநாசம் அரசு மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உயிரிழந்தார். கபிஸ்தலம் போலீசார் வழக்கு பதிந்து, மதியழகன் உட்பட மூவரையும் தேடி வருகின்றனர்.