ரோடு விரிவாக்க பகுதிகளில் வெள்ளை நிற கோடுகள் அசியம்

விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் பல்வேறு மாநில நெடுஞ்சாலைகள் விரிவாக்கம் செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில் பணிகள் முடிந்த பகுதிகளில் வெள்ளை நிற கோடுகள் வரைந்து விபத்து அபாயத்தை தவிர்க்க வேண்டும்.
மாவட்டத்தில் விருதுநகர் - மல்லாங்கிணர் ரோடு, விருதுநகர் - அருப்புக்கோட்டை ரோடு, விருதுநகர் - சிவகாசி ரோடுகள் விரிவாக்கம் செய்யப்பட்டு வருகின்றன. இவை தவிர அழகாபுரி ரோட்டில் பாலங்கள் கட்டும் பணிகள் நடந்து வருகின்றன.
இந்நிலையில் அருப்புக்கோட்டை ரோடும், மல்லாங்கிணர் ரோடும் பாதியளவில் முடிந்துள்ளன. இந்நிலையில் முடிந்த பகுதி வரையில் வெள்ளை கோடுகள் வரைந்தால் விபத்து அபாயம் தவிர்க்கப்படும் என வாகன ஓட்டிகள் எண்ணுகின்றனர். காரணம், இரவு நேரங்களில் இந்த இரு ரோடு பகுதிகளில் தெருவிளக்குகள் இல்லை. இதனால் பணி முடிந்து அருப்புக்கோட்டையில் இருந்து விருதுநகர் திரும்புவோர் ரோட்டின் அகல எல்லை எது என தெரியாமல் விளைநிலங்களில் வண்டியை விடுவதும், மேலும் வளைவுகளில் தவறுவதும் தொடர்கிறது.
இது தவிர மது குடித்து விட்டு வாகனம் ஓட்டுவோராலும் விபத்து ஏற்படுகிறது. இதே போல் மல்லாங்கிணர் ரோட்டிலும் கனரக வாகனங்கள் அதிகம் வந்து செல்வதால் எது ஓரம் என தெரியாமல் டூவீலர் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். எனவே புதிதாக விரிவாக்கம் செய்யப்பட்ட இந்த ரோடுகளில் பணி முடிந்த பகுதிகள் வரை வெள்ளை கோடுகள் ஏற்படுத்தி விபத்து அச்சத்தை தவிர்க்க வேண்டும்.