இரண்டு ரவுண்டானாக்களில் பாரம்பரிய சிலைகள் திறப்பு

பொள்ளாச்சி: பொள்ளாச்சியில் இரண்டு ரவுண்டானாக்களில், பாரம்பரிய சிலைகள் நிறுவப்பட்டு திறக்கப்பட்டது.
பொள்ளாச்சி நகராட்சி அலுவலகத்தில், ரவுண்டானா அழகுப்படுத்துதல் குறித்து தொழில்வர்த்தக சபை மற்றும் தன்னார்வ அமைப்புகளுடன் கருத்து கேட்பு கூட்டம் கடந்தாண்டு நடத்தப்பட்டது. அதில், நகராட்சி பகுதிகளில் உள்ள எட்டு ரவுண்டானாக்கள், ஆறு எண்ணிக்கையிலான மைய தடுப்புகள் அழகுப்படுத்துதல் பணி, சி.எஸ்.ஆர். நிதியில் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.
உடுமலை தேர்நிலையம் ரோடு, யானை, மரப்பேட்டை பள்ளி அருகே மயில், மாட்டு சந்தை ரவுண்டானாவில், மாடு வைக்க முடிவு செய்யப்பட்டது. மற்ற ரவுண்டானாக்களில், பூங்கா, லைட்டிங் அமைத்து பராமரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக இரண்டு ரவுண்டானாக்கள் அழகுப்படுத்தும் பணிகள் மேற்கொள்ள பூமி பூஜை கடந்தாண்டு போடப்பட்டது. காந்திசிலை அருகே ரேக்ளா மற்றும் பஸ் ஸ்டாண்ட் அருகே தென்னை மரத்தில் விவசாயி ஏறுவது போன்ற சிலைகள் நிறுவும் பணிகள் நடைபெற்றன. ‘ஆர் கோல்டு’ நிறுவனம் சார்பில், இப்பணி தலா, 25 லட்சம் ரூபாய் செலவில் மேற்கொள்ளப்பட்டன. பணிகள் நிறைவடைந்த நிலையில் நேற்று பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.
பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் திறந்து வைத்தார். மாவட்ட கலெக்டர் பவன்குமார், சப் – கலெக்டர் ராமகிருஷ்ணசாமி, கமிஷனர் நித்யா மற்றும் தொழில் வர்த்தக சபை தலைவர் முத்துசாமி மற்றும் பலர் பங்கேற்றனர்.