Politics
தட்டாஞ்சாவடி தொகுதியில் 14 பேர் மனு தாக்கல்

புதுச்சேரி: தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலில் 6 பிரதான கட்சிகள் உட்பட மொத்தம் 15 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
புதுச்சேரி, தட்டாஞ்சாவடி தொகுதிக்கு கடந்த 9ம் தேதி அரசிதழில் இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியானது. அன்றே வேட்புமனு தாக்கலும் துவங்கியது. தொடக்க நாட்களில் பிரதான அரசியல் கட்சிகளோ, சுயேச்சை வேட்பாளர்களோ மனு தாக்கல் செய்யவில்லை. இதற்கிடையில் 12, 13, 14ம் தேதிகளில் தொடர் அரசு விடுமுறையால், வேட்புமனு தாக்கல் செய்யப்படவில்லை. 15ம் தேதி நா.த.க., வேட்பாளர் கார்த்திகுமாரி, சுயேச்சை வேட்பாளர் வசந்தி ஆகியோர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
இந்நிலையில் வேட்பு மனு தாக்கலுக்கு கடைசி நாளான நேற்று தட்டாஞ்சாவடி ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலகத்தில், தேர்தல் அலுவலர் அர்ஜூன் ராமகிருஷ்ணனிடம் மனு தாக்கல் செய்ய பிரதான கட்சிகள் மற்றும் சுயேச்சைகள் வேட்பாளர்கள் குவிந்தனர்.
இதில் காங்., சார்பில் விநாயகம், மாற்று வேட்பாளராக அவரது மனைவி பூங்கோதை, என்.ஆர்.காங்., வேட்பாளராக அசோக் ஆனந்த், மாற்று வேட்பாளராக அவரது தந்தை ஆனந்தன், தி.மு.க., சார்பில் சேதுசெல்வம், அவருக்கு மாற்று வேட்பாளராக முத்துராமன், இந்திய கம்யூ., சார்பில் கட்சியின் மாநில செயலாளர் முகமதுசலீம், இந்திய குடியரசு கட்சி சார்பில் கலைவாணன் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்தனர். மேலும் 4 சுயேச்சைகள் நேற்று மனு தாக்கல் செய்தனர்.
மொத்தமாக 6 பிரதான கட்சிகளின் 3 மாற்று வேட்பாளர் மற்றும் 5 சுயேச்சைகள் என, 14 பேர் 15 மனுக்களை தாக்கல் செய்தனர். வேட்புமனுக்கள் இன்று பரிசீலனை செய்யப்பட்டு, இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாகிறது.