Arts, culture, entertainment and media
புதுகையில் 15 நாட்கள் ஆகியும் பிடிபடாத கைதி
புதுக்கோட்டை : புதுக்கோட்டையில் போலீஸ்காரர்களை தள்ளி விட்டு, கைதி தப்பியோடிய சம்பவத்தில், 15 நாட்கள் ஆகியும் பிடிக்க முடியாமல், போலீருக்கு டிமிக்கு கொடுக்கும் கைதியை, போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
புதுக்கோட்டை மச்சுவாடி பகுதியில், கடந்த மாதம் 17ல் இரண்டு வீடுகள் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். கணேஷ்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை செய்து, மதுரையை சேர்ந்த மாரிமுத்து, 40 என்பவரை கைது செய்தனர். கடந்த, 23ல் மாரிமுத்துவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு முன்பாக, வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு ஏட்டு மனோஜ்குமார், கார்த்திக் ஆகிய இருவரும் மாரிமுத்துவை பைக்கில் அழைத்து சென்றபோது, இரண்டு போலீஸ்காரர்களையும் கீழே தள்ளிவிட்டு மாரிமுத்து தப்பினார்.
பாதுகாப்பு பணியில் அலட்சியமாக செயல்பட்டதாக, ஏட்டு மனோஜ்குமார், கார்த்திக் ஆகிய இருவரையும் பணியிடை நீக்கம் செய்து, கடந்த 24ம் தேதி மாவட்ட எஸ்.பி., ரவீந்திரகுமார் குப்தா உத்தரவிட்டார்.மேலும், கணேஷ்நகர் எஸ்.ஐ., ரமேஷ்பாபு காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். பின்னர், அவர் பெரம்பலூர் மாவட்டத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
போலீஸ் தரப்பில் கூறுகையில், 'போலீசாரின் பாதுகாப்பையும் மீறி கைதி தப்பி ஓடி, 15 நாட்கள் ஆகியுள்ளநிலையில், அவரை கைது செய்ய, மாவட்ட எஸ்.பி., தலைமையில், 2 சிறப்பு தனிப்படைகள் அமைத்து, தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் தீவிரமாக தேடி வருகின்றனர். மாரிமுத்துவை விரைவில் கைது செய்து விடுவோம்' என்றனர்.