Politics
பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்: இடத்தேர்வை அரசு மறுபரிசீலனை செய்ய தி.வேல்முருகன் கோரிக்கை

ஏற்கெனவே பள்ளிகள், கல்லூரிகள், குடியிருப்புகள், அரசு அலுவலகங்கள் என மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில், தலைமைச் செயலகம் மற்றும் சட்டப்பேரவை வளாகம் உருவானால் ஏற்படக்கூடிய போக்குவரத்து மாற்றங்கள், பாதுகாப்பு ஏற்பாடுகள், வாகன நிறுத்த தேவை உள்ளிட்டவற்றை அரசு வெளிப்படையாக விளக்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் தி.வேல்முருகன் கேட்டுக்கொண்டுள்ளார்.
பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகத்திற்கான இடத்தேர்வை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் தி.வேல்முருகன் கேட்டுக்கொண்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:-
தமிழ்நாட்டின் புதிய தலைமைச் செயலகம் என்பது வெறும் கட்டுமானத் திட்டம் அல்ல. அது தமிழகத்தின் நிர்வாக தலைமையகமாகவும், தமிழர் அடையாளத்தை பிரதிபலிக்கும் வரலாற்றுச் சின்னமாகவும் அமைய வேண்டிய ஒன்று.
அத்தகைய பெரும் திட்டத்திற்கு பட்டினப்பாக்கத்தை தேர்வு செய்வதற்கு முன், அந்தப் பகுதியின் தற்போதைய நிலையும் எதிர்கால தேவைகளும் முழுமையாக பரிசீலிக்கப்பட்டுள்ளதா? என்ற கேள்வி எழுகிறது.
ஏற்கெனவே பள்ளிகள், கல்லூரிகள், குடியிருப்புகள், அரசு அலுவலகங்கள் என மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில், தலைமைச் செயலகம் மற்றும் சட்டப்பேரவை வளாகம் உருவானால் ஏற்படக்கூடிய போக்குவரத்து மாற்றங்கள், பாதுகாப்பு ஏற்பாடுகள், வாகன நிறுத்த தேவை உள்ளிட்டவற்றை அரசு வெளிப்படையாக விளக்க வேண்டும்.
அதேபோல், அப்பகுதியைச் சார்ந்த மீனவ மக்களின் வாழ்வாதாரம், கடலோரச் சூழலியல் மற்றும் பொதுமக்களின் அன்றாட பயன்பாடு பாதிக்கப்படாத வகையில் திட்டம் வடிவமைக்கப்பட வேண்டும்.
இது இன்றைய தேவைக்கான கட்டிடம் மட்டுமல்ல. நாளைய நிர்வாகத் தேவைகள், விரிவாக்கத்திற்கான இடவசதி, பொதுப்போக்குவரத்து, அவசரகாலச் சேவைகள் உள்ளிட்ட அனைத்தையும் கருத்தில் கொண்டு நீண்டகாலத் திட்டமிடல் அவசியம்.
மேலும், தமிழகத்தின் தலைமை நிர்வாக வளாகம் என்ற பெருமையைப் பெறும் கட்டிடம், தமிழர் கட்டிடக்கலை, வரலாறு, பண்பாடு ஆகியவற்றை உலகிற்கு எடுத்துக்காட்டும் வகையில் அமைய வேண்டும் என்பதும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் உறுதியான நிலைப்பாடு.
புதிய தலைமைச் செயலகம் அமைப்பதில் எங்களுக்கு எதிர்ப்பு இல்லை. ஆனால், எங்கே அமைக்கப்படுகிறது என்பதிலும், எப்படி அமைக்கப்படுகிறது என்பதிலும் மக்களின் நலன் முதன்மையாக இருக்க வேண்டும்.
எனவே, பட்டினப்பாக்கம் தொடர்பான அனைத்து சாதக பாதகங்களையும் நிபுணர் குழுவின் மூலம் முழுமையாக ஆய்வு செய்து, பொதுமக்கள் மற்றும் மீனவ மக்களின் கருத்துகளையும் கேட்டறிந்து, தேவையானால் மாற்று இடங்களையும் பரிசீலிக்க வேண்டும்.
தமிழ்நாட்டின் தலைமைச் செயலகம் நிர்வாகத்தின் முகமாக மட்டுமல்ல. தமிழ்நாட்டின் முகமாகவும் இருக்க வேண்டும்!
இதையும் படிங்க: புதிய தலைமை செயலகம் திட்டம் ரத்து செய்து முதலமைச்சர் விஜய் உத்தரவு பிறப்பிக்கக்கோரி ஈபிஎஸ் வலியுறுத்தல்
இதனை உறுதி செய்யும் வகையில் தமிழக அரசு வெளிப்படையான, தொலைநோக்குப் பார்வையுடன் கூடிய முடிவை மேற்கொள்ள வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்வதாக அக்கட்சியின் தலைவர் தி.வேல்முருகன், தெரிவித்துள்ளார்.
