குப்பையை நான்கு ஆக தரம் பிரிக்க தூய்மை பணியாளர்கள் கோரிக்கை
கோவை: புது திடக்கழிவு மேலாண்மை விதிப்படி குப்பையை 4 ஆக தரம் பிரித்து வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில், குப்பை சேகரிப்பு தொடர்பாக மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் சில கோரிக்கைகளை முன் வைத்துள்ளனர்.
பாரதிய கோவை மாவட்ட பொது தொழிலாளர் சங்க தூய்மை பணியாளர் பிரிவு பொது செயலர் ஸ்டாலின் பிரபு கூறியதாவது:
100 வார்டுகளில் வீடு வீடாக குப்பை சேகரிக்க, தனியார் நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. அந்நிறுவனம் மூலம் 4,650 ஒப்பந்த பணியாளர்கள் குப்பை சேகரிக்கிறோம்.
தள்ளுவண்டியில் சென்று சேகரிக்கும் பணியாளர்களுக்கு தினசரி 150 முதல் 200 வீடுகளும், மினிடோரில் சென்று சேகரிக்கும் பணியாளர்களுக்கு தினசரி 900 வீடுகளும் டார்கெட் கொடுக்கப்படுகிறது.
அதில் 2 பணியாளர்கள் தலா 450 வீடுகளின் குப்பையை அகற்ற வேண்டும். மினிடோரில் செல்லும் பணியாளர்களை தினசரி 2 லோடு அடிக்க கட்டாயப்படுத்துகிறார்கள். டன் கணக்கில் குப்பையை எடுக்க அழுத்தம் கொடுக்கின்றனர்.
இப்பணிகளை காலை 11 மணிக்குள் முடித்துவிட்டு, சாக்கடை சுத்தம் செய்தல், புல் வெட்டுதல், இலை தழைகளை அகற்றுதல் போன்ற கூடுதல் வேலைகளை செய்ய வேண்டியுள்ளது.
மக்களிடம் இப்போதுதான் குப்பையை, 2 வகையாக தரம் குறிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. 4 வகையாக பிரித்து கொடுக்க தாமதாகும். எங்களுக்கு நேரம் இல்லாததால் குப்பையை தரம் பிரிக்க முடிவதில்லை.
8 மணி நேரம் குப்பை சேகரிக்கும் பணியை மட்டுமே கவனிக்க உத்தரவிட வேண்டும். இதன்மூலம் 4 வகையாக குப்பையை தரம் பிரித்து மேலாண்மை செய்ய முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.