Sport
ஆந்திரா பயணித்த - தமிழக மகளிர் கால்பந்து அணி வாழ்த்தி வழி அனுப்பிய அமைச்சர் விக்னேஷ்
திண்டுக்கல், செப். 14 – தேசிய ஜூனியர் மகளிர் கால்பந்துப் போட்டியில் பங்கேற்க தமிழக மகளிர் கால்பந்து அணி வீராங்கனைகள், ஆந்திரா மாநிலம் சென்றனர். அவர்களை மதுவிலக்குத்துறை அமைச்சர் விக்னேஷ் வாழ்த்தி, வழி அனுப்பினார்.
டாக்டர் தாலிமீரான் ஏவோ கோப்பைக்கான தேசிய ஜூனியர் மகளிர் கால்பந்து போட்டி ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டத்தில் செப்.,30 வரை நடக்கிறது. இதில் நாடு முழுவதும் இருந்து 32 அணிகள் பங்கேற்கின்றன. இரண்டு பிரிவுகளாக நடக்கும் இப்போட்டியில் தமிழக மகளிர் கால்பந்து அணி முதல் பிரிவு ஆட்டத்தில் இடம் பெற உள்ளது.
தேசிய கால்பந்துப் போட்டியில் பங்கேற்கும் தமிழக ஜூனியர் மகளிர் அணிக்கான பயிற்சி முகாம் திண்டுக்கல் தனியார் சி.பி.எஸ்.இ., பள்ளியில் 20 நாட்களாக நடந்து வருகிறது. இந்நிலையில் பயிற்சி முடிந்து போட்டிகளில் பங்கேற்க தயாரான தமிழக அணி வீராங்கனைகளை வாழ்த்தி வழியனுப்பும் நிகழ்ச்சி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடந்தது.
இதில் தமிழக மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் விக்னேஷ் பங்கேற்று மகளிர் அணியினருக்கு சீருடைகள் வழங்கி, வாழ்த்தினார். இதில் கலெக்டர் துர்கா, கால்பந்து சங்கத்தின் துணைத் தலைவர் ரமேஷ் பட்டேல், செயலாளர் சண்முகம், மாவட்ட விளையாட்டு அலுவலர் சிவா, தமிழக அணி பயிற்சியாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.