2 சிறுவர்களின் விலைமதிப்பற்ற உயிர்களைப் பறித்த விலையுயர்ந்த பைக்!

புதுக்கோட்டை மாவட்டம் பூவரசக்குடி கிராமத்தில் சிறுவர்கள் ஓட்டிச் சென்ற விலை உயர்ந்த பைக் சாலையோர கம்பியில் மோதிய விபத்தில் விலைமதிப்பற்ற 2 சிறுவர்களின் உயிர்கள் பரிதாபமாகப் பறிக்கப்பட்டுள்ளது. மேலும் 2 சிறுவர்கள் தீவிர சிகிச்சையில் உள்ளனர். இந்த சம்பவத்தால் கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் அழகம்பாள்புரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சின்ராசு புதுக்கோட்டையில் ஒரு பேக்கரியில் கேக் மாஸ்டரான இவர் சில மாதங்களுக்கு முன்பு ஈ.எம்.ஐ.யில் விலை உயர்ந்த பைக் வாங்கியுள்ளார். நேற்று முன்தினம் இரவு பைக் வீட்டில் கிடந்ததைப் பார்த்த சின்ராசின் உறவினரான சத்தியமூர்த்தி மகன் கண்ணன் (16) எடுத்துக் கொண்டு அதே பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் அட்சயகார்த்திக் (15), மற்றும் மிதுன் (14), சந்தோஷ் (14) ஆகியோரை ஏற்றிக் கொண்டு பூவரசக்குடி வழியாகச் வேகமாகச் சென்றார். அப்போது பைக் வேகத்தால் நிலைதடுமாறி சாலையோர தடுப்புக் கம்பிகளில் மோதிய விபத்தில் கண்ணன் சம்பவ இடத்திலும், அட்சயகார்த்திக் மருத்துவமனையிலும் உயிரிழந்தனர்.
மற்ற இருவருக்கும் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சம்பவம் குறித்து வல்லத்திராகோட்டை போலிசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். சின்ராசு தன் பைக்கை எடுக்க வேண்டாம் என்று பல முறை சொன்ன பிறகும் கண்ணன் பைக்கை எடுத்துச் சென்றதாகக் கூறுகின்றனர். மேலும், இது போன்ற விலை உயர்ந்த பைக்குகள் அதிவேகமாகச் செல்வதால் ஆபத்தை உணராத சிறுவர்கள், இளைஞர்கள் அதிவேகமாக ஓட்டுவதால் இது போல அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு விலைமதிப்பற்ற உயிர்கள் பறிபோகிறது. தங்கள் பிள்ளைகள் பைக் வேண்டும் என்று அடம்பிடிப்பதால் ஆபத்துகளை உணறாமல் கடன் வாங்கியாவது தங்கள் பிள்ளைகளுக்கு இது போன்ற பைக்குகளை வாங்கிக் கொடுக்கின்றனர்.
அந்த பைக்குகளே அவர்களுக்கு ஆபத்து ஏற்படுத்துவதை சம்பவம்வங்கள் நடந்த பிறகே உணர்கின்றனர். இது போன்ற சம்பவங்கள் இனிமேலும் தவிர்க்கப் பெற்றோர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்கின்றனர். இது போன்ற பைக்குகளில் அதிவேகமாகச் சென்று வீடியோ எடுத்து ரீல்ஸ் போடவே பல சிறுவர்கள் இளைஞர்கள் அதிவேகமாக ஓட்டுவதால் விபத்துகள் ஏற்படுகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)