Lifestyle and human interest
1980 டிரெண்டிங்கில் அமைச்சர்கள்; இணையத்தில் வைரல்

உங்களின் இப்போதைய படத்தை அப்லோடு செய்தால், அதை, 1980களில் நீங்கள் இருந்தது போன்று மாற்றித்தரும், 'சாட்ஜிபிடி' டிரெண்டிங், இணையத்தை பரபரக்க வைத்துள்ளது. பிரபலங்கள், சினிமா நட்சத்திரங்கள், கிரிக்கெட் வீரர்கள், சாமானியர்கள் என பலரும், ஐக்கியமான அந்த ஜோதியில், மத்திய அமைச்சர்களும் இணைந்தனர்.
'Vibing to the 80s trend' என்ற தலைப்புடன், எக்ஸ் தளத்தில் மத்திய அமைச்சர் பீயூஷ் கோயல் வெளியிட்ட படத்தில், இளம் வயது கோயல், கோட் சூட், கூலிங் கிளாஸ் அணிந்து ஸ்டைலாக நடந்து வருவது போல இருந்தது. மற்றொரு அமைச்சரான கிரண் ரிஜிஜூவும், இதேபோன்ற படத்தை வெளியிட்டு டிரெண்டிங்கில் இணைந்தார்.
உ.பி.,யின் நொய்டாவைச் சேர்ந்த ஆகாஷ், 1999 ரூபாய்க்கு ஆன்ட்ராய்டு சாதனம் ஒன்றை ஆன்லைனில் ஆர்டர் செய்திருந்தார். முன்கூட்டியே பணமும் செலுத்தியிருந்தார். கூரியரில் வந்த பார்சலை திறந்து பார்த்த அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அதில், மாட்டுச்சாணம் இருந்தது. அவரது புகார், சைபர் கிரைம் போலீஸ் விசாரணையில் உள்ளது. இதைப்பார்த்த நெட்டிசன்கள், அறிமுகம் இல்லாத இணையதளம், கம்பெனியில் ஆன்லைனில் ஆர்டர் செய்யக்கூடாது என்றும், முன்கூட்டியே பணம் செலுத்தக்கூடாது என்றும் அறிவுரை செய்து பதிவிட்டு வருகின்றனர்.
'லிங்க்டுஇன்' சமூக வலைதளம், தொழில் ரீதியான நெட்வொர்க் ஏற்படுத்தவும், வேலை வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்ளவும் பயனுள்ளதாக இருக்கிறது. இதில், 'பிஎச்.டி., பட்டம் பெற்று, அமெரிக்காவில் வசிக்கும் தன் மகனுக்கு, தாய் ஒருவர் பெண் தேடியுள்ளார்.
'அந்தத் தாயின் அணுகுமுறை அழகானது, நேர்மையானது' என்று ஒரு தரப்பினரும், 'லிங்க்டுஇன்' தளத்தை இவ்வாறு பயன்படுத்தியது தவறு என்று இன்னொரு தரப்பினரும் மாறி மாறி கமென்ட் செய்து வருகின்றனர்.
இந்தியாவில் இது சாத்தியமா?
அமெரிக்காவில் வசிக்கும் இந்திய பெண் ரித்து ஷர்மா, பகிர்ந்த ஒரு வீடியோ, இன்ஸ்டாகிராமில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவில் பள்ளிக் குழந்தைகளை அழைத்து வரும் வாகனம், 'ரெட்' சிக்னல் போட்டு சாலையில் நிற்கும் போது, மற்ற வாகனங்கள் அனைத்தும் நின்றுவிட வேண்டும்;
காலியிடம் இருந்தாலும், எந்த திசையில் இருந்தும் வாகனம் செல்லக்கூடாது; மீறி கடந்து சென்றால் குறைந்தபட்சம், இந்திய மதிப்புக்கு, 47 ஆயிரம் ரூபாய் முதல் அதிகபட்சம் 94 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என்பதும் விதிமுறை என்கிறார், ரித்து.
'அதாவது, பள்ளி வாகனத்தில் ஏறி, இறங்கும் குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது' என்பதற்காக இந்த விதிமுறை உள்ளது. இதைக் குறிப்பிட்டு, ரித்து ஷர்மா வெளியிட்ட அந்த வீடியோ இணையத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. 'நம் நாட்டிலும் இப்படி உத்தரவு பிறப்பிக்க வேண்டும்' என்றும், 'இதுவெல்லாம் இந்தியாவில் சாத்தியமே இல்லை' என்றும், நெட்டிசன்கள் மாறி மாறி கமென்ட் செய்து வருகின்றனர்.
பணம் உங்களை தேடி வரும்!
ஆஸ்திரியாவை சேர்ந்தவர் ஜர்கன் பெய்லோம், 2018 முதல் இந்தியாவில் வசிக்கிறார். உல்லாச கப்பல் சேவை அளிப்பவர். அவரது நிறுவனத்தின் சந்தை மதிப்பு, 8,000 கோடி ரூபாய். இந்தியாவின் உல்லாச கப்பல் பயணச்சந்தையின், 99 சதவீதம் இவர் வசம் தான் இருக்கிறது. 40 ஆண்டுக்கு முன், கப்பலில் உதவியாளராக வேலைக்கு சேர்ந்து படிப்படியாக உயர்ந்தவர். 'என்னால் முடியும் என்ற மனப்பான்மை வேண்டும்.
நான் இந்திய சந்தை, அதன் மக்கள், கலாசாரத்தை மிக விரைவாக கற்றுக் கொண்டேன்' என்கிறார், பெய்லோம். 'தேவையில்லாவிட்டால் செலவு செய்யாதீர்கள். என்ன செய்ய வேண்டும் என்று தெரிந்தால், பணத்தை தேடி நீங்கள் செல்ல தேவையில்லை; அதுவே உங்களைத் தேடி வரும்' என்கிற அவரது பேட்டி இணையத்தில் வைரலாகி உள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)
