Politics
கழுகார் பதில்கள்!

அவையில் ‘ஹாயாக’ உட்கார்ந்து ரசித்து, சிரித்து எடப்பாடி பழனிசாமி எப்படிப் பார்த்துக்கொண்டிருந்தாரோ, அப்படித்தான் பா.ஜ.க தலைமையும் பார்த்துக்கொண்டிருந்தது.
ம.ச.வெ.கூ... ம.ந.கூ... ஒப்பிடுக?
ம.ந.கூ-வில் வைகோ மட்டும் இருந்தார். ம.ச.வெ.கூ-வில் மகன் துரை வைகோவும் இருக்கிறார்.
மூக்குக்கு மேல் கோபம் வந்தால் முதல்வர் விஜய் என்ன செய்வார்?
வழக்கம்போலத்தான் பாரதி முருகன்... தி.மு.க-வைத் திட்டுவார்!
தியேட்டர் விலைக்கு வருகிறது... வாங்கலாமா கழுகாரே?
சட்டமன்ற நிகழ்வுகளை நேரலையில் ஒளிபரப்பும் ஐடியா இருந்தால், நிச்சயம் வாங்கலாம்!
எந்த அரசியல் அலைக்கும் அஞ்சாத தலைவர் யார்?
அரசியல் சுனாமியே வந்தாலும் அதில் ஸ்விம்மிங்கைப் போடும் ஜி.கே.வாசன்தான்!
`ஆதாரம்’ என்றால் என்ன?
தமிழ்நாட்டு அரசியலைப் பொறுத்தவரை, மாறி மாறி ‘சேதாரம்’ செய்துகொள்ள ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியும் பயன்படுத்திக்கொள்ளும் வெற்று வார்த்தை!
``தனிப்பட்ட குற்றச் சம்பவத்துக்கும், மாநிலத்தின் ஒட்டுமொத்த சட்டம்-ஒழுங்கு நிலைக்கும் வேறுபாடு இருக்கிறது’’ என்று கூறுகிறாரே முதல்வர் விஜய்?!
‘உங்களுக்கு வந்தா ரத்தம்; மத்தவங்களுக்கு வந்தா தக்காளி சட்னியா?’ என்ற வடிவேலு வசனம்தான் நினைவுக்கு வருகிறது.
தமிழக சட்டப்பேரவையில் அனல் பறக்கும் தி.மு.க., த.வெ.க-வின் விவாதங்களை பா.ஜ.க தலைமை எப்படிப் பார்க்கிறது?
கழுகாரும் ஜோதிடம் பார்க்க ஆரம்பித்தால் பெரிய பெரிய பதவிகள் தேடி வரும்தானே?
ஜோதிடருக்கு வந்த பெரிய பதவியே ஒரே நாளில் பறிபோன பிறகு, ஜோதிடத்தின் மீதிருந்த இம்மி அளவு நம்பிக்கையும் பறிபோய்விட்டது.
இரு தொகுதி இடைத்தேர்தல்... யாருக்கு மிகவும் சோதனை?
ஐந்து மாதங்களுக்குள்ளாக இரண்டாவது முறை வாக்களிக்கும் வாக்காளப் பெருமக்களுக்குத்தான்..!
ஒரு தொகுதியில் வெற்றிபெற்ற எம்.எல்.ஏ தன் தொகுதிக்கு ஒன்றும் செய்யாவிட்டால், அவரைத் தகுதி நீக்கம் செய்யத் தொகுதி மக்களுக்கு உரிமை உண்டா?
அப்படியோர் உரிமை மக்களுக்கு இருந்திருந்தால், பெரும்பாலான தொகுதிகளுக்கு அடிக்கடி இடைத்தேர்தல் வந்திருக்குமே..!
கூப்பிடும் தூரத்தில் இருந்தும் முதல்வருக்கு கமல்ஹாசன் கடிதம் எழுதியிருக்கிறாரே?
வாங்கி வைத்த ‘Member of Parliament’ லெட்டர்பேடை சும்மா வைத்திருக்க முடியுமா?
சட்டப்பேரவை நேரலை யாருக்குச் சாதகம்?
வேறு யாருக்கு... மீம் கிரியேட்டர்களுக்குத்தான்!
இல்லாத தொழிற்சாலையால் மக்கள் அவதிப்படுவதாகக் கூறி சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் அதை மூடச் சொல்ல, அமைச்சரோ, `அதை மூடினால் தொழிலாளர்கள் பாதிக்கப்படுவர்’ என்கிறார். என்ன நடக்கிறது சட்டமன்றத்தில்?
குறிப்பிட்ட அந்த இடத்தில் தொழிற்சாலையை கட்டாமல்விட்ட தி.மு.க-வைக் குறை சொல்லாமல், இல்லாத தொழிற்சாலையில் வேலை பார்க்கும் இல்லாத தொழிலாளர்களுக்காகக்கூட பரிதாபப்படும் அமைச்சரைக் கேள்வி கேட்டு நெருக்கடிக்கு உள்ளாக்கலாமா பாஸ்!
‘`பிரதமர் வேட்பாளராகத் தமிழக முதல்வர் ஜோசப் விஜய் இருப்பார் என்று அமைச்சர்கள் கூறிவருவது, இந்த ஆண்டின் மிகப்பெரிய நகைச்சுவை’’ என்கிறாரே டி.டி.வி.தினகரன்?
சொந்தக் கட்சியிலுள்ள ஒரேயொரு எம்.எல்.ஏ-வே எந்தக் கட்சியில் இருக்கிறார் என்று தெரியாமல் தத்தளித்துக் கொண்டிருப்பது, இந்த ஆண்டின் எத்தனையாவது மிகப்பெரிய நகைச்சுவை?
‘`என்னுடைய பதிலுரையின் இடையேயான எனது உடல்மொழி யதேச்சையாக வெளிப்பட்டதுதான்...’’ என்று முதல்வர் விஜய் விளக்கமளித்திருக்கிறாரே?
உடல்மொழி யதேச்சையாக வந்ததாம்... அதைவிடப் பெரிய யதேச்சை, தான் பேசியதை ‘பதிலுரை’ என்று சொல்லிவிட்டதுதான்! கவனித்தீரா?
சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரில், அதிக செய்கூலி, சேதாரம் யாருக்கு?
சட்டப்பேரவையின் மாண்புக்குத்தான்!
கழுகார் பதில்கள், ஜூனியர் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-600 002.
kalugu@vikatan.com என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம்!
