Politics
குப்பையை தரம் பிரித்து கொடுங்கள் நகராட்சி ஊழியர்கள் விழிப்புணர்வு
திருவள்ளூர், செப். 17-– குப்பையை நான்கு வகையாக தரம் பிரித்து வழங்க வேண்டும் என, வார்டு தோறும், திருவள்ளூர்
குப்பையை நான்கு வகையாக தரம் பிரித்து வழங்க வேண்டும் என, வார்டு தோறும், திருவள்ளூர் நகராட்சி ஊழியர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
திருவள்ளூர் நகராட்சியில், 27 வார்டுகளில், 19,022 வீடுகள், 3,125 கடைகள், 20க்கும் மேற்பட்ட ஹோட்டல்கள் உள்ளன. நகராட்சி பகுதியில், 82 ஆயிரத்து 185 பேர் வசித்து வருகின்றனர். இங்கு, நாளொன்றுக்கு, 10.81 டன் மட்கும் குப்பை, 13.85 டன் மட்காத குப்பை என, 24.66 டன் குப்பை கழிவுகள் சேகரமாகின்றன.
அவற்றில், மட்காத குப்பை தரம் பிரிக்கப்பட்டு, மறு சுழற்சிக்காக தனியார் நிறுவனங்களுக்கு வினியோகிக்கப்படுகிறது. மட்கும் குப்பை உரமாக மாற்றப்பட்டு வருகிறது.
இந்நிலையில், அக்., 1ம் தேதி முதல், பொதுமக்கள், தங்கள் வீடுகளில் உள்ள குப்பை கழிவுகளை மட்கும் குப்பை, மட்காத குப்பை, மருத்துவ கழிவுகள் மற்றும் இதர கழிவுகள் என, நான்கு வகையாக பிரித்து கொடுக்க வேண்டும் என, நகராட்சி கமிஷனர் தாமோதரன் உத்தரவிட்டுள்ளார்.
இதையடுத்து, நகராட்சி சுகாதார பிரிவு ஊழியர்கள், ஒவ்வொரு வார்டிலும் வசிக்கும் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
நேற்று, செக்கடி தெருவில் நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில், பொதுமக்கள் மத்தியில் நகராட்சி சுகாதார அலுவலர் மோகன் கூறியதாவது:
பொதுமக்கள் அனைவரும், குப்பை கழிவுகளை நான்கு வகையாக பிரித்து வழங்க வேண்டும். மட்கும் கழிவுகளை பச்சை நிறத் தொட்டியிலும், மட்காத கழிவுகளை நீல நிறத் தொட்டியிலும் போட வேண்டும்.
மருத்துவக் கழிவுகளை சிவப்பு நிறத் தொட்டியிலும், சிறப்பு கழிவுகளை கருப்பு நிறத்தொட்டியிலும் தனித்தனியாக பிரித்து, துாய்மை பணியாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

