Economy, business and finance
வோடபோன் ஐடியா மீதான ஜி.எஸ்.டி., வழக்கு தள்ளுபடி

வோடபோன் ஐடியா நிறுவனத்துக்கு விதிக்கப்பட்ட, 363 கோடி ரூபாய் ஜி.எஸ்.டி.,யை ரத்து செய்த, மும்பை உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, மத்திய அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. நிறுவனத்தின் வரி பொறுப்பு தொடர்பாக எழுந்த இந்த விவகாரத்தில், உயர் நீதிமன்ற உத்தரவே தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாருதி சுசூகி நிறுவனம், தேர்ந்தெடுக்கப்பட்ட சில கார் மாடல்களின் விலையை, செப்டம்பர் முதல், அதிகபட்சமாக 20 ஆயிரம் ரூபாய் வரை உயர்த்தியுள்ளது. உற்பத்தி செலவு உள்ளிட்ட காரணங்களால், இந்தாண்டில், நிறுவனம் விலையை இரண்டாவது முறையாக உயர்த்தியுள்ளது. பண்டிகை கால விற்பனை தொடங்க உள்ள நிலையில், இந்த விலை உயர்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மறுபரிசீலனை செய்யும் 'நைக்'
ஒரு காலத்தில் வேகமான வளர்ச்சியை பதிவு செய்த நைக் நிறுவனத்தின் வர்த்தக உத்தியில், தற்போது பின்னடைவு ஏற்பட்டுள்ளது. மொத்த விற்பனை வாயிலான வர்த்தகம் மீண்டு வரும் நிலையில், நேரடி விற்பனை மற்றும் டிஜிட்டல் பிரிவுகள் தொடர்ந்து அழுத்தத்தில் உள்ளன. இதனால், வளர்ச்சியை மீட்டெடுக்க தனது வர்த்தக உத்தியை நைக் மறுபரிசீலனை செய்து வருகிறது.
ஜிண்டால் ஸ்டெயின்லெஸ் நிறுவனம், ஜப்பானின் ஜே.எப்.இ., ஸ்டீல் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இதன் வாயிலாக, பெரிட்டிக் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் வகைகளின் தயாரிப்பு தரம் மற்றும் உற்பத்தி நடைமுறைகளை மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிறுவனத்தின் தயாரிப்பு தரத்தை உயர்த்துவதுடன், உற்பத்தி திறனை மேம்படுத்தவும் இந்த ஒப்பந்தம் உதவும்.