Crime, law and justice
தமிழகத்தில் யானை வழித்தடங்கள் எவை? அடையாளம் காண மூன்று மாதம் அவகாசம்!

சென்னை: யானைகள் வழித்தடங்களாக அறிவிக்க வேண்டிய பகுதிகளை அடையாளம் கண்டு அறிக்கை அளிக்க, மூன்று மாத காலம் அவகாசம் வழங்கி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் யானை வழித்தடங்களை அடையாளம் கண்டு அறிவிப்பு வெளியிடக் கோரி, விலங்குகள் நல ஆர்வலர் முரளீதரன் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.
பாதுகாவலர் அதில், உயர் நீதிமன்ற உத்தரவின்படி, யானைகள் வழித்தடங்களை கண்டறிய, முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் தலைமையில் குழு அமைத்து, தமிழக அரசு உத்தரவிட்டது.
இந்த வழக்கு, நீதிபதிகள் என்.சதீஷ்குமார், கே.ராஜசேகர் அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.
ஆய்வு பணி அப்போது, 'கிருஷ்ணகிரி மாவட்டத்தில், ஜவாலகிரி -- தக்கட்டி, ஜவாலகிரி -- அஞ்செட்டி, பில்லிக்கல் -- ஜவாலகிரி ஆகிய மூன்று பகுதிகளை, யானைகள் வழித்தடங்களாக அறிவித்து, ஆக., 27ம் தேதி அரசாணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது' என, அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
அதைத்தொடர்ந்து, யானைகள் வழித்தடங்களை கண்டறிந்து வரும் குழு தலைவரான முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் வேணுபிரசாத், 'தமிழக அரசு அமைத்துள்ள குழு, 41 பகுதிகளை யானைகள் வழித்தடங்களாக அடையாளம் கண்டு உள்ளது.
'இந்த 41 பகுதிகளையும் யானைகள் வழித்தடங்களாக அறிவிக்க வேண்டுமா என்பது குறித்து ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. ஆய்வு பணிகளை முடித்து, விரிவான அறிக்கை தாக்கல் செய்ய அவகாசம் வழங்க வேண்டும்' என கோரிக்கை விடுத்தார்.
இதை ஏற்ற நீதிபதிகள், யானைகள் வழித்தடங்களாக அறிவிக்க வேண்டிய பகுதிகளை அடையாளம் கண்டு அறிக்கை அளிக்க, மூன்று மாத காலம் அவகாசம் வழங்கி, விசார ணையை டிச., 4ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.