Politics
மேகதாது தீர்மானம்: அதிமுக கொறடா தாக்கல் செய்த வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு
மேகதாது அணை தீர்மானம்: அதிமுக கொறடா தாக்கல் செய்த வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு. சென்னை உயர்நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தது.
மேகதாது குறுக்கே அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தத்தை எதிர்த்து அதிமுக கொறடா தாக்கல் செய்த வழக்கின் தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்துள்ளது.
மேகதாது குறுக்கே அணை கட்டும் கர்நாடக அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த ஜூன் 19ஆம் தேதி தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இறுதியில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கோரிக்கையை ஏற்று மேகதாது அணை விவகாரம் தொடர்பாக நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்ற வாசகம் சேர்க்கப்பட்டது.
இதற்கு அதிமுக பாமக இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து இருந்தன. இந்நிலையில் இந்த திருத்தத்தை எதிர்த்து அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனு, தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வு முன் விசாரணைக்கு வந்தபோது, அக்ரி கிருஷ்ணமூர்த்தி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் எஸ்.ஆர்.ராஜகோபால், சிறப்பு தீர்மானம் தொடர்பாக ஜூன் 18ஆம் தேதி எம்எல்ஏக்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட தீர்மான நகலில் இடம்பெறாத திருத்தத்தின் மீது எந்த விவாதமும் நடத்தப்படாமல் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த திருத்தம் ஏக மனதாக நிறைவேற்றப்படவில்லை. ஆனால் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டதாக மத்திய அரசுக்கு அந்த தீர்மானம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த போது, சபாநாயகர், பேச அனுமதிக்கவில்லை என வாதிட்டார்.
அரசுத் தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், கடந்த ஜூன் 19-ஆம் தேதி சட்டமன்றத்தில் நடைபெற்ற நிகழ்வுகளின் வீடியோ காட்சிகளை நீதிபதிகளிடம் காட்டி, வாதங்களை முன்வைத்தார். அப்போது அவர், எதிர்க்கட்சித் தலைவரின் திருத்தத்தை ஏற்று அதனை தீர்மானத்தில் சேர்க்க வேண்டும் என முதலமைச்சர் கேட்டுக் கொண்டார். இதனை ஏற்றுக் கொண்டு சபாநாயகர் திருத்தத்துடன் தீர்மானத்தை வாக்கெடுப்புக்கு விட்டார். திருத்தம் கொண்டு வரப்பட்டபோது எவரும் எதிர்க்கவில்லை.
சட்டமன்ற நடவடிக்கைகளை நீதிமன்றத்தில் கேள்வி எழுப்ப முடியாது. அதற்கு அரசியல் சாசனம் தடை விதிக்கிறது. மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்து நிறைவேற்றப்பட்ட இந்த தீர்மானத்தை சட்டமன்றத்தின் முடிவாக கருதி வழக்குத் தொடர முடியாது என்றும் வாதிட்டார். அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், வழக்கை தீர்ப்புக்காக தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து உத்தரவிட்டார்.
