Politics
இணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன்?
கட்சிக்குள் தினகரனை நுழையவிட்டால், மொத்தமும் அவர் கன்ட்ரோலுக்குப் போய் விடும். 2017-ல் பழனிசாமி முதல்வராகப் பொறுப்பேற்ற வுடன், தினகரனின் சொல்படிதான் ஆட்சியே நடந்தது | discussion about amma merge with admk?

அ.தி.மு.க-வுக்குள் நடக்கும் அதிரடி நகர்வுகள்..!
சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு, ஆச்சர்யமான அரசியல் நகர்வுகள் தமிழக அரசியலைச் சூடாக்கி வருகின்றன. அந்த வகையில், அ.தி.மு.க - அ.ம.மு.க இணையப்போவதாகப் பரவும் தகவல், ரத்தத்தின் ரத்தங்கள் மத்தியில் பரபரப்பைக் கூட்டியிருக்கிறது. என்ன விவகாரம்?
மீண்டும் பிரச்னை வெடிக்குமோ? - அரண்டுகிடக்கும் எடப்பாடி டீம்!
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில், 47 தொகுதிகளில் அ.தி.மு.க வெற்றிபெற்ற நிலையில், அந்தக் கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமிக்கு எதிராகப் பெரும் கிளர்ச்சி வெடித்தது. தேர்தல் தோல்விக்குப் பொறுப்பேற்கச் சொல்லி, முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, சி.வி.சண்முகம், கே.பி.அன்பழகன் உள்ளிட்ட சீனியர்கள் போர்க்கொடி உயர்த்தினர். இந்தக் களேபரங்களுக்கு இடையே, அ.தி.மு.க-வைச் சேர்ந்த ஆறு எம்.எல்.ஏ-க்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு த.வெ.க-வுக்குத் தாவவும், அ.தி.மு.க கலகலத்துப்போனது.
சட்டமன்றத்துக்குள் பழனிசாமிக்கு நன்றி சொல்வதும், அவரைப் புகழ்வதுமாக வேலுமணியும் சி.வி.சண்முகமும் செயல்பட்டாலும், அ.தி.மு.க-வுக்கென ஒதுக்கப்பட்டிருக்கும் சட்டமன்ற அறைக்குள் கிளர்ச்சியில் ஈடுபடும் 15 எம்.எல்.ஏ-க்கள் இன்றுவரை செல்லவில்லை. ‘கட்சியிலிருந்து பிரிந்து சென்றிருக்கும் சசிகலா, டி.டி.வி.தினகரன் உள்ளிட்டவர்களை மீண்டும் அ.தி.மு.க-வில் இணைக்க வேண்டும். தேர்தல் தோல்விக்கு பழனிசாமியே பொறுப்பேற்க வேண்டும்’ என்பதில் உறுதியாகவே இருக்கிறது வேலுமணி தலைமையிலான டீம்.
‘கூட்டத்தொடர் முடிந்ததும் உட்கட்சிப் பிரச்னை மீண்டும் வெடிக்குமோ... பொதுக்குழுவைக் கூட்டச் சொன்னால் என்ன செய்வது?’ என பழனிசாமி தரப்பு அரண்டுகிடக்கும் சூழலில்தான், அ.ம.மு.க-வை அ.தி.மு.க-வுடன் இணைப்பது குறித்து சமீபத்தில் பேச்சுவார்த்தை நடந்திருக்கிறது. தினகரனுடன் வேலுமணி தரப்பினர் நேரில் பேசியதாகச் சொல்கின்றன விவரமறிந்த வட்டாரங்கள்.
இணைப் பொதுச்செயலாளர் தினகரன்?
இது குறித்து நம்மிடம் பேசிய கிளர்ச்சி எம்.எல்.ஏ- க்கள் சிலர், “2017-ல் தினகரனை ஓரங்கட்டியதில் வேலுமணி, தங்கமணி தரப்புக்கும் முக்கியப் பங்கு இருந்தது. ஆனால், இன்று கட்சியின் நலனுக்காக தினகரனை மீண்டும் அ.தி.மு.க-வுக்குள் வரச் சொல்லி வேலுமணியே பேசியிருக்கிறார்.
`பொதுக்குழுத் தீர்மானம் மூலம்தான் என்னை நீக்கினீர்கள். அதுபோல, பொதுக்குழுவைக் கூட்டி மீண்டும் இணைப்பது குறித்து முடிவெடுங்கள். பழனிசாமியே பொதுச்செயலாளராக இருக்கட்டும். ஆனால், முக்கிய முடிவுகள், நீக்கம், நியமனங்களில் என்னுடைய ஆலோசனையும் ஒப்புதலும் பெறப்பட வேண்டும். அதற்கான அதிகாரத்தை எனக்குத் தர வேண்டும். ஒற்றைத் தலைமையிலும்கூட கட்சியை வெற்றிப்பாதைக்கு அவரால் அழைத்துச் செல்ல முடியவில்லை. இனியும் கட்சி வீணாகிவிடக் கூடாது’ என்று கூறியிருக்கிறார் தினகரன். இதையடுத்து, அவரை அ.தி.மு.க-வின் இணைப் பொதுச்செயலாளராகக் கொண்டுவருவது குறித்துப் பேசப்பட்டிருக்கிறது.
செப்டம்பர் 2017-லில், கிளர்ச்சியில் ஈடுபட்ட ஓ.பி.எஸ்., கே.பி.முனுசாமி உள்ளிட்டவர்கள் அ.தி.மு.க-வில் இணைந்தபோது, ஒருங்கிணைப் பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டன. நீக்கம், நியமனம், கூட்டணி விவகாரம், சீட் பங்கீடு உள்ளிட்டவற்றில் ஓ.பி.எஸ்., பழனிசாமி இருவரும் சேர்ந்துதான் முடிவெடுத்தனர். அது போன்ற இரட்டைத் தலைமையை உருவாக்கச் சொல்கிறார் தினகரன். இந்தப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு, போயஸ் கார்டனில் சசிகலாவையும் சந்தித்துப் பேசியிருக்கிறது வேலுமணி டீம். அவைத்தலைவர் பொறுப்பை அவருக்கு அளிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டிருக்கிறது” என்றனர்.
“தினகரனை உள்ளே விட மாட்டார் பழனிசாமி...” - ஆருடம் சொல்லும் சீனியர்கள்!
வேலுமணி தரப்பிடம் நடந்த பேச்சுவார்த்தை யின் எதிரொலியாகவே, ஆகஸ்ட் 25-ம் தேதி தஞ்சாவூரில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, “அ.தி.மு.க-வையும் அ.ம.மு.க-வையும் பிரித்துப் பார்க்காதீர்கள். அ.தி.மு.க அதிருப்தியாளர்கள் பொதுவெளியில் கருத்து கூறுவது நம்மை பலவீனப்படுத்தும். பழனிசாமியுடன் இணைந்து பயணித்தால் மட்டுமே கட்சி பலப்படும்” என்றிருக்கிறார் தினகரன்.
இந்த அரசியல் நகர்வுகள் குறித்து நம்மிடம் பேசிய பழனிசாமி ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் சிலர், “கட்சிக்குள் தினகரனை நுழையவிட்டால், மொத்தமும் அவர் கன்ட்ரோலுக்குப் போய் விடும். 2017-ல் பழனிசாமி முதல்வராகப் பொறுப்பேற்ற வுடன், தினகரனின் சொல்படிதான் ஆட்சியே நடந்தது. நகராட்சி நிர்வாகத்துறை செயலாளர் பொறுப்புக்கு ஒருவரைக் கொண்டுவர வேலுமணி முயன்றபோது, அதை தினகரன் எதிர்த்தார். முதல்வராக இருந்த பழனிசாமிக்கும் டோஸ் விழுந்தது. அதைத் தொடர்ந்துதான் தினகரனுக்கு எதிராக, கொங்கு மண்டல சீனியர்கள் பலரும் திரும்பினார்கள். ஆக, தினகரனைக் கட்சிக்குள் விட்டால் தன் அதிகாரம் போய்விடும் என்பதில் தெளிவாக இருக்கிறார் எடப்பாடி. இப்போதைக்கு கிளர்ச்சியாளர்களைச் சமாளிக்க இணைத்துக்கொள்வதுபோல சிக்னல் கொடுக்கிறார். பொதுக்குழு கூட்டுவதை தள்ளிப்போட முயல்கிறார்” என்றனர்.
2018-ல் அ.தி.மு.க-வை மீட்டெடுப்பதே தனது லட்சியம் எனக் கூறி அ.ம.மு.க-வைத் தொடங்கிய தினகரன், அதே லட்சியத்துடன் மீண்டும் தாய்க் கழகத்துக்குள் நுழையத் தயாராகிறார். ஆனால், அதற்கு பழனிசாமி சம்மதிப்பாரா என்பதே கேள்வி. வேலுமணி டீமின் அடுத்த காய்நகர்த்தலே அதற்கு விடை சொல்லும்!
