Environment
பயணிகளில் வீசி செல்லும் பிளாஸ்டிக் கழிவுகள்: வன உயிரினங்களுக்கு ஆபத்து
கூடலுார்: கூடலுார் கீழ்நாடுகாணி சாலையோரம் சுற்றுலா பயணிகள் வீசி செல்லும் பிளாஸ்டிக் கழிவுகளால் வன சூழல் பாதிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தின், சுற்றுச்சூழலை பாதுகாக்க, 21 வகையான பிளாஸ்டிக் பொருட்கள், பிளாஸ்டிக் தண்ணீர் மற்றும் குளிர்பான பாட்டில்கள் விற்பனை செய்யவும், பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. உள்ளூரில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்து, அரசு அதிகாரிகள் அபராதம் விதித்து வருகின்றனர். மேலும், மாநில எல்லையில் சோதனை சாவடி அமைத்து, சுற்றுலா வாகனங்களை ஆய்வு செய்து தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், கேரளாவில் இருந்து கீழ்நாடுகாணி வழியாக, நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகள், எடுத்து வரும் உணவை, சாலையோரம் அமர்ந்து உட்கொண்டு, பிளாஸ்டிக் கழிவுகளை சாலையோரம் வீசி செல்கின்றனர். இதனால் வனசூழலுக்கு மட்டுமல்லாமல், விலங்குகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
வனச்சரகர் அய்யனார் கூறுகையில், '' சாலையோரம் சுற்றுலா பயணிகள் பிளாஸ்டிக் கழிவுகளை வீசி செல்வதை தடுக்க கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு, பிளாஸ்டிக் தடை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். எனினும், சிலர் பிளாஸ்டிக் கழிவுகளை சாலையோரம் வீசி செல்கின்றனர். கண்காணித்து அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.