உடலில் காயங்களுடன் உயிரிழந்த மக்னா யானை
பந்தலுார்: கேரளா வயநாடு பகுதியில், காயங்களுடன் உயிரிழந்த மக்னா யானை குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தினர்.
கேரள மாநிலம் வயநாடு பகுதியில், வயநாடு வன விலங்கு சரணாலய பகுதியில் பொன்குழி அருகே வனத்தை ஒட்டிய பகுதியில், மக்னா யானை ஒன்று உயிரிழந்து கிடப்பதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்தது.
வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தபோது, 30 வயதுடைய மக்னா யானை தாடை மற்றும் உடலின் பல்வேறு இடங்களில் காயங்களுடன் உயிரிழந்து கிடந்தது தெரிய வந்தது. அதன் உடலில் பிரேத பரிசோதனை செய்த கால்நடை மருத்துவ குழுவினர், அதே பகுதியில் அடக்கம் செய்தனர். ‘பிற ஆண் யானைகளுடன் சண்டையிட்டு, உடலில் காயங்கள் ஏற்பட்டு மக்னா யானை உயிரிழந்திருக்க கூடும்,’ என, மருத்துவ குழுவினர் தெரிவித்தனர். வனத்துறை விசாரணை நடந்து வருகிறது.