மத மாற்றத்தை இரும்புக்கரம் கொண்டு தடுக்க துறவிகள் மாநாட்டில் தீர்மானம்
தாராபுரம்: 'மதமாற்றத்தை இரும்புக்கரம் கொண்டு தடுக்க வேண்டும்' என, தாராபுரத்தில் நடந்த துறவிகள் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில் அமராவதி ஆரத்தி திருவிழா, செப்.6ல் துவங்கியது. நேற்று நடந்த துறவிகள் மாநாட்டு நிகழ்வுக்கு, அகில பாரதிய சன்னியாசிகள் சங்க நிறுவனர் சுவாமி ராமானந்த மகராஜ் தலைமை வகித்தார். விழா ஒருங்கிணைப்பாளர் மதுரை ஆதினம் விஸ்வலிங்கேஸ்வர தம்பிரான் சுவாமிகள் முன்னிலை வகித்தார்.
கோவிலுக்கு சொந்தமான கட்டடங்களின் வாடகையை, தற்போதைய நிலவரப்படி உயர்த்தி நிலங்களுக்கு உரிமையாளரான இறைவன் பெயரில், கட்டணமில்லா கல்லுாரிகள் அமைக்க வேண்டும். கும்பாபிஷேக நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் மாற்று மத மக்கள் பிரதிநிதிகள், கோவில் மீது நம்பிக்கை உள்ளது குறித்து, கோவில் பதிவேட்டில் கையொப்பமிடுவதை காட்சிப்படுத்த வேண்டும்.
சமீபகாலமாக அதிகரித்து வரும் மதமாற்றத்தை இரும்புக்கரம் கொண்டு தடுக்க வேண்டும். கோவில் கும்பாபிஷேகங்களில் அப்பகுதியை சேர்ந்த மடாதிபதிகள், சன்னியாசிகளுக்கு முன்னுரிமை தர வேண்டும்.
வேலூர் அருகே துறவியை தாக்கிய காவலரை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும். சன்னியாசிகள் சங்கம் சார்பில், 2028 கும்பகோணம் மகாமகத்தை, தென்பாரத கும்பமேளாவாக நடத்த இருக்கிறோம். அமராவதியின் எதிர்காலத்தை கருதி, மணல் கொள்ளையை தடுத்து, அமராவதியை காப்பாற்ற, ஒரு அறக்கட்டளை ஏற்படுத்த தீர்மானிக்கப்படுகிறது என்பன உட்பட, 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தொடர்ந்து, மாலையில் துறவிகள் பேரணி, அதையடுத்து நடந்த பொதுக்கூட்டத்தில், பா.ஜ., மாநில துணைத் தலைவர் கனகசபாபதி, இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் ஆகியோர் பேசினர். தொடர்ந்து, அகஸ்தீஸ்வரர் கோவில் வளாகத்தில் நடந்த அமராவதி ஆரத்தி நிகழ்ச்சியை, திரளான பக்தர்கள் கண்டுகளித்தனர்.