Lifestyle and human interest
சூயிங் கம், டூத்-பேஸ்ட் உள்ளிட்ட பொருட்களில் சேர்க்கப்படும் ஸைலிடால்... மாரடைப்பு அபாயம் அதிகரிக்குமா?
சூயிங் கம், டூத்-பேஸ்ட், ஜாம், தயிர், ஐஸ்கிரீம் உள்ளிட்ட பொருட்களில் பயன்படுத்தப்படும் ஸைலிடால் குறித்து அமெரிக்கா, ஜெர்மனி ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

சூயிங் கம், டூத்-பேஸ்ட், ஜாம், தயிர் மற்றும் ஐஸ்கிரீம் உள்ளிட்ட உணவு மற்றும் அன்றாடப் பயன்பாட்டு பொருட்களில் சர்க்கரைக்கு மாற்றாக பயன்படுத்தப்படும் ஸைலிடால் (Xylitol) என்ற செயற்கை இனிப்பூட்டி தொடர்பாக அதிர்ச்சியளிக்கும் ஆய்வு தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்கா மற்றும் ஜெர்மனியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில், இரத்தத்தில் ஸைலிடால் அளவு அதிகமாக இருப்பவர்களுக்கு இதயக் குழாய் தொடர்பான பாதிப்புகள் ஏற்படும் அபாயம் அதிகமாக இருக்கலாம் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மாரடைப்பு, பக்கவாதம் ஏற்படும் அபாயம்?
ஆய்வுத் தகவல்களின்படி, இரத்தத்தில் ஸைலிடால் அளவு அதிகமாகக் காணப்பட்டவர்களுக்கு மாரடைப்பு, பக்கவாதம் அல்லது திடீர் மரணம் ஏற்படும் வாய்ப்பு 57 சதவீதம் வரை அதிகமாக இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸைலிடால் உடலில் அதிகமாக இருப்பது ரத்தம் உறையும் தன்மையை அதிகரிக்கக்கூடும் என்றும், இதன் மூலம் இதயக் குழாய்கள் மற்றும் ரத்த நாளங்களில் பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு இருக்கலாம் என்றும் ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
ஸைலிடால் என்றால் என்ன?
ஸைலிடால் (Xylitol) என்பது சர்க்கரைக்கு மாற்றாகப் பயன்படுத்தப்படும் ஒரு வகை இனிப்பூட்டியாகும். இது குறிப்பாக சூயிங் கம், டூத்-பேஸ்ட், ஜாம், தயிர், ஐஸ்கிரீம் உள்ளிட்ட பல்வேறு உணவு மற்றும் அன்றாடப் பயன்பாட்டுப் பொருட்களில் சேர்க்கப்படுகிறது.
சர்க்கரையை விட குறைந்த கலோரி கொண்டிருப்பதால், சர்க்கரை இல்லாத அல்லது குறைந்த சர்க்கரை கொண்ட பொருட்களில் இனிப்புச் சுவையை வழங்குவதற்காக ஸைலிடால் பயன்படுத்தப்படுகிறது. மேலும், பல் சொத்தை ஏற்படும் அபாயத்தை குறைக்க உதவும் தன்மை இருப்பதாகக் கருதப்படுவதால், பல்வேறு பல் பராமரிப்பு பொருட்களிலும் இது பயன்படுத்தப்படுகிறது.