Religion
அக்னி தீர்த்தம் வரை தீச்சட்டி ஊர்வலம்... ராமேஸ்வரத்தில் பக்தர்கள் நேர்த்திக்கடன்

ராமேஸ்வரம் ஜே.ஜே.நகரில் உள்ள சமயபுரத்து மாரியம்மன் கோவிலில் 26-வது ஆண்டு முளைப்பாரி திருவிழா நடைபெற்று வருகிறது.
ராமேஸ்வரம் ஜே.ஜே.நகரில் அமைந்துள்ள சமயபுரத்து மாரியம்மன் கோவிலில் 26-வது ஆண்டு முளைப்பாரி திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவின் ஒரு பகுதியாக, ஏராளமான பக்தர்கள் தீச்சட்டி ஏந்தி நேர்த்திக்கடன் செலுத்தினர்.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அடுத்த ஜே.ஜே. நகர் பகுதியில் அருள்பாலிக்கும் சமயபுரத்து மாரியம்மன் கோவிலில் கடந்த வாரம் முளைப்பாரி திருவிழா காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. திருவிழா தொடங்கிய நாள் முதல் தினமும் இரவு சிறப்பு அலங்காரங்கள் மற்றும் பூஜைகள் நடத்தப்பட்டு, பக்தர்கள் தரிசனம் செய்து வந்தனர். முளைப்பாரி திருவிழாவின் ஒரு முக்கிய நிகழ்வாக தீச்சட்டி திருவிழா நடைபெற்றது. இதில் அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான ஆண்களும் பெண்களும் நேர்த்திக்கடன் செலுத்தும் விதமாக சமயபுரத்து மாரியம்மன் கோவிலில் இருந்து தீச்சட்டி ஏந்தி அக்னி தீர்த்தம் கடற்கரைக்குச் சென்றனர். அங்கிருந்து ராமநாதசுவாமி கோவிலின் நான்கு ரத வீதிகள் வழியாக வலம் வந்தனர்.
ரத வீதிகள் வழியாக வலம் வந்த பக்தர்கள் பின்னர் கோவிலுக்குத் திரும்பி, தங்கள் நேர்த்திக்கடனை நிறைவு செய்து சமயபுரத்து மாரியம்மனை வழிபட்டனர். ராமேஸ்வரம் நகரில் இருந்து ஏராளமான பக்தர்கள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். திருவிழாவின் முக்கிய நிகழ்வான முளைப்பாரி திருவிழா நாளை நடைபெற உள்ளது. அன்று பெண்கள் முளைப்பாரியை தலையில் சுமந்து சென்று அக்னி தீர்த்தம் கடலில் கரைத்து திருவிழாவை நிறைவு செய்வார்கள்.
