கன்னியாகுமரியில் தலைக்கவச விழிப்புணர்வு மாரத்தான்... அசர வைத்த 3 வயது பெண் குழந்தை..!

கன்னியாகுமரியில் சாலை விபத்துகளைத் தடுக்கவும், தலைக்கவசம் அணிய வலியுறுத்தியும் காவல்துறை சார்பில் மாரத்தான் போட்டி நடைபெற்றது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் சாலை விபத்துகளைத் தடுக்கும் வகையிலும், பொதுமக்கள் தலைக்கவசம் அணிய வேண்டும் என்பதை வலியுறுத்தியும் காவல்துறை சார்பில் கன்னியாகுமரியில் மாரத்தான் போட்டி நடைபெற்றது. இதில் மூன்று வயது பெண் குழந்தை கலந்து கொண்டு ஓடியது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை சார்பில், “தலைக்கவசம் அணிவோம் – உயிரைக் காப்போம், போதைப்பொருளை ஒழிப்போம்” என்ற விழிப்புணர்வு கருத்தை வலியுறுத்தி இன்று மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது. இந்த நிகழ்வில் ஆண்களுக்கு 10 கிலோமீட்டர் மற்றும் பெண்களுக்கு 5 கிலோமீட்டர் தூரம் என போட்டிகள் நடைபெற்றன.
கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா வளைவு பகுதியில் இருந்து தொடங்கிய மாரத்தான் போட்டியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். காவல்துறை அதிகாரிகள் மட்டுமின்றி பொதுமக்களும் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.
