மண்டல கோ – கோ போட்டி தி.நகர் பள்ளிகள் முதலிடம்
சென்னை: கோடம்பாக்கம் மண்டல அளவிலான கோ- – கோ போட்டியில், மாணவர்கள் பிரிவில் தி.நகர் பகுதி பள்ளிகள் ஆதிக்கம் செலுத்தி, மூன்று பிரிவுகளில் முதலிடம் பிடித்தன.
பள்ளிக்கல்வித் துறையின் கோடம்பாக்கம் மண்டல கோ – கோ போட்டியை, சூளைமேடு மாநகராட்சி பள்ளி சார்பில், தி.நகரில் நேற்று நடத்தியது.
போட்டியில், 14, 17 மற்றும் 19 வயதுக்கு உட்பட்ட மூன்று பிரிவுகளில் மண்டலத்திற்கு உட்பட 32 பள்ளிகளைச் சேர்ந்த 350 மாணவ – மாணவியர் உற்சாகமாக பங்கேற்றனர்.
மாணவர்களுக்கான 14 வயது பிரிவில், தி.நகர் சி.டி.நாயகம் மேல்நிலைப் பள்ளி; 17 வயது பிரிவில், மேற்கு மாம்பலம் சீதாராம் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி, 19 வயது பிரிவில், தி.நகர் கர்நாடக சங்கா மேல்நிலைப் பள்ளிகள், முதலிடத்தை பிடித்தன.
மூன்று பிரிவுகளிலும் தி.நகர் பகுதி பள்ளிகள் முதலிடத்தை பிடித்தது, அப்பகுதியில் மாணவர்களிடையே கோ- – கோ விளையாட்டுக்கு உள்ள ஆர்வத்தையும், பயிற்சியின் பலனையும் வெளிப்படுத்துவதாக உள்ளது.