வரி மேல்முறையீட்டுத் தீர்ப்பாயம் விவகாரம் : தமிழக அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு
வரிவிதிப்பு மேல்முறையீட்டுத் தீர்ப்பாயம் அமைத்த சட்டப்பிரிவை எதிர்த்த வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தின் கீழ் வரிவிதிப்பு மேல்முறையீட்டுத் தீர்ப்பாயம் அமைத்த சட்டப்பிரிவை எதிர்த்த வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சேலம் அஸ்தம்பட்டியில் உள்ள ஹோட்டல் எல்.ஆர்.என். எக்சலன்சி உரிமையாளர் சுந்தரேசன் தாக்கல் செய்துள்ள வழக்கில், ஹோட்டல் நடத்திவந்த கட்டடத்துக்கு 2022ஆம் ஆண்டு வரை ஆண்டுக்கு ரூ. 1.58 லட்சம் சொத்துவரி செலுத்திய நிலையில் 2023-2024 ஆண்டுக்கு ரூ. 9 லட்சம் அளவுக்கு கணக்கீடு செய்து, 2023-24 முதல் 2025-26 வரையிலான சொத்து வரி பாக்கி என ரூ. 26,46,808 செலுத்த வேண்டும் என அஸ்தம்பட்டி மண்டல துணை ஆணையர் நோட்டீஸ் அனுப்பியதாக குறிப்பிட்டுள்ளார்.
சொத்துவரி விதிப்பில் ஆட்சேபம் இருந்தால் 30 நாட்களுக்குள் இயக்குநரிடம் மேல்முறையீடு செய்வதற்கு 1998ஆம் ஆண்டின் தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தின் 118வது பிரிவு அதிகாரம் வழங்கியுள்ள நிலையில், அதற்கு மாற்றாக 2023ஆம் ஆண்டில் மேல்முறையீட்டுத் தீர்ப்பாயத்தை அமைத்து புதிய பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார். அந்த மேல்முறையீட்டுத் தீர்ப்பாயத்தின் குழுவில் அதன் அதிகாரிகளே இடம்பெற விதி 270 வகைசெய்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இயற்கை நீதிக்கு முரணாக, பாதிக்கப்பட்டவருக்கு நியாயம் கிடைக்காத வகையில் ஒருதலைபட்சமாக, தனக்கு எதிரான மேல்முறையீட்டை தானே விசாரிக்கக் கூடியதாக உருவாக்கப்பட்டுள்ள வரிவிதிப்பு மேல்முறையீட்டுத் தீர்ப்பாயம் அமைத்த சட்டப்பிரிவை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார். மேலும், தனக்கு அனுப்பப்பட்ட ரூ. 26.46 லட்சம் அளவுக்கான சொத்துவரி விதிக்கும் நோட்டீஸ் மீது நடவடிக்கை எடுக்க தடை விதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார்.
