தக்காளி செடிகளையும் விட்டு வைக்காத காட்டு யானை
பெ.நா.பாளையம்: சின்னதடாகம் வட்டாரத்தில் மேற்கு தொடர்ச்சி மலையோர கிராமங்களில் காட்டு யானைகளின் நடமாட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. யானைகளை கட்டுப்படுத்த பல்வேறு முயற்சிகளை வனத்துறையினர் மேற்கொண்டாலும், அவை கிராமங்களை முற்றுகையிடும் போக்கு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதுவரை காட்டு யானைகள் தென்னை, வாழை, சோளம் உள்ளிட்ட பயிர்களை சேதப்படுத்தி வந்தன. தற்போது, தக்காளி செடிகளையும் சேதப்படுத்த துவங்கியுள்ளது.
சின்னதடாகம் மேற்கே விவசாயி நடராஜ் தோட்டத்தில் தக்காளி செடிகள் பயிரிடப்பட்டு உள்ளன. இவை முற்றி, பழுத்த நிலையில் விற்பனைக்காக கொண்டு செல்லும் தருவாயில் உள்ளது. நேற்று முன்தினம் இரவு தோட்டத்துக்குள் புகுந்த யானை தக்காளி செடிகளை மிதித்து சேதப்படுத்தியது. விடிய, விடிய அதே பகுதியில் சுற்றிய யானை அதிகாலை மலையடிவாரம் திரும்பியது.
காட்டு யானை பிரச்சனைக்கு தீர்வு காண, மாவட்ட வனத்துறை உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.