Politics
தண்ணீர் எடுக்க மினரல் வாட்டர் நிறுவனத்திற்கு தடை: ஊரக வளர்ச்சித்துறை
ஆத்துார்: குடிநீர் தட்டுப்பாடு காரணமாக, ஆத்துார் காமராஜர் நீர்த்தேக்கம் அருகே உள்ள தனியார் நிறுவனம் நிலத்தடி நீரை எடுப்பதற்கு தடை விதித்து ஊரக வளர்ச்சித்துறை உத்தரவிட்டுள்ளது.
காமராஜர் ஆட்சி காலத்தில் திண்டுக்கல் மாநகராட்சியில் குடிநீர் பிரச்னையை தீர்க்க, மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் ஆத்துார் காமராஜர் நீர்த்தேக்கம் அமைக்கப்பட்டது. திண்டுக்கல் மாநகராட்சிக்கு தினமும் 20 எம்.எல்.டி.,க்கும் கூடுதலான தண்ணீர் தேவைப்படுகிறது. காவிரி தண்ணீருக்கான தலைமை நீரேற்று நிலைய பகுதி (கரூர் மாவட்டம் புதுப்பாளையம்) ஆக., 2018ல் வெள்ளப்பெருக்கில் சிக்கி நீரேற்றம் பாதித்த போது, திண்டுக்கல்லின் முக்கிய ஆதாரமாக இந்த நீர்தேக்கம் உதவியது.
சின்னாளபட்டி, சித்தையன்கோட்டை பேரூராட்சிகள், அக்கரைப்பட்டி, ஆத்துார், சீவல்சரகு, வக்கம்பட்டி ஊராட்சிகளுக்கான கூட்டு குடிநீர் திட்ட ஆழ்துளை கிணறுகளும் இங்குள்ளன. அவ்வப்போது ஆண்டுக்கு அதிகபட்சமாக 3 முறை (மொத்த கொள்ளளவு 21 அடி) நிரம்பி மறுகால் பாய்வது வழக்கம். நீர்தேக்கத்தை சுற்றியுள்ள விவசாய நிலங்களில், வெளிநாட்டு நிறுவனங்கள் உள்பட ஏராளமான தனியார் குடிநீர் நிறுவனங்கள் உள்ளன. இவற்றில் பல விதிமீறிய ஆழ்துளை கிணறுகள் மூலம், நிலத்தடி நீரை உறிஞ்சி எடுக்கின்றன. தினமும் ஆயிரக்கணக்கான லிட்டர் தண்ணீர் எடுத்து, சுத்திகரித்து பல்வேறு அளவுள்ள பாட்டில்களில் நிரப்பி, வெளி மாவட்ட விற்பனைக்கு அனுப்பி வருகின்றனர்.
தனியார் தண்ணீர் நிறுவனங்களின் துவக்கம் முதல், நீர்மட்ட பாதிப்பு அதிகரித்து பூஜ்ஜியத்தை கடந்து கீழே இறங்க துவங்கியது. விதி மீறல் புகார்கள் எழுந்தபோதும் அதிகாரிகள் அலட்சியத்தால், தற்போது நீர்த்தேக்கம் வறண்டு நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து விட்டது. இந்நிலையில் விவசாயிகள் புகார் மீது உயர் அதிகாரிகள் அறிவுறுத்தல்படி, ஊரக வளர்ச்சித் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
ஆத்துார் வட்டார வளர்ச்சி அலுவலர் இளையராஜா, 'தனியார் தண்ணீர் நிறுவனத்திற்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். அதில், 'சம்பந்தப்பட்ட நிறுவனம், தண்ணீர் எடுப்பதை தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும்' என, அறிவுறுத்தப்பட்டு உள்ளது.