நாட்டிலேயே முதன்முறையாகப் பக்தர்களுக்குக் காப்பீடு; திருப்பதி கோயில் நிர்வாகம் அதிரடி முடிவு

ஆந்திர மாநிலத்தில், உள்ள திருப்பதி ஏழுமலையான் கோயில் உலகப் பிரசித்தி பெற்றது. இந்த கோயிலுக்குத் தினந்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்துசெல்கின்றனர். இந்நிலையில், கோயிலுக்கு வந்து செல்லும் பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், நிர்வாகம் முக்கிய முடிவு ஒன்றை எடுத்துள்ளது. அதன்படி, கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு இலவச காப்பீடு வழங்கக் கோயில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
மிகவும் பிரபலமான மற்றும் பணக்கார கடவுள் என்று அழைக்கப்படும், திருப்பதி ஏழுமலையானைத் தரிசிக்கத் தினமும் தென் மாநிலங்களில் மட்டுமல்லாமல் வட மாநிலங்களிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இதனால், நாளுக்குநாள் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் சூழலில், அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது தமது பொறுப்பு என நிர்வாகம் உணர்ந்துள்ளது. இதன் காரணமாகவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இது சம்பந்தமாகத் திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழுக் கூட்டம் திருமலையில் உள்ள அன்னம்மா பவனில் நேற்று நடைபெற்றது. இது குறித்துப் பேசிய அறங்காவலர் குழுக் கூட்டத் தலைவர், ”நாட்டிலேயே முதல் முறையாகக் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்து இயற்கை மரணம் எய்தும் பக்தர்களுக்கு ரூ.2 லட்சம் காப்பீடு தொகை வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக ரூ.3 கோடி குழு காப்பீடு தொகையாகச் செலுத்தப்பட உள்ளது. அதே போன்று, திருமலை மலைப்பாதையில் விபத்தில் இறந்தால் ரூ.3 லட்சம் காப்பீடு வழங்கப்பட்டு வந்தது. தற்போது, அந்த காப்பீட்டுத் தொகை ரூ.10 லட்சமாக உயர்த்தப்படுகிறது” என்று தெரிவித்தார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)