Politics
மாவலி பதில்கள்

மம்தா பானர்ஜியின் மருமகள் பிரிஷ்டி முகர்ஜி தற்கொலை செய்துகொண்டது குறித்து?
அபிஷேக் பானர்ஜிபோல, பிரிஷ்டி முகர்ஜி மம்தாவின் நெருங்கிய ரத்த உறவு அல்ல. மேற்கு வங்கத்தில் பள்ளி ஆட்சேர்ப்பு முறைகேடு வழக்கில் நீதிமன்ற உத்தரவுகளுக்குப் பிறகு ரத்து செய்யப்பட்ட நியமனங்களில் பிரிஷ்டியின் வேலையும் பறிபோயிருந்தது. கணவருடனான உறவு கசந்து விவாகரத்துக்கு விண்ணப்பித்திருந்தார். கூடவே மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்துகொண்டதாகத் தெரிகிறது.
கே.ஆர். அசோகன், கிட்டம்பட்டி.
பாகிஸ்தானில் 100 ஆண்டுகள் பழமையான இந்துக் கோயில் இடிக்கப்பட்டதற்கு, இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது பற்றி?
இந்தியாவில் சஹாரன்பூரில் பள்ளிவாசலை இடிக்கும்போது, அது பங்களாதேஷ், பாகிஸ்தானில் எதிரொலிக்கத்தான் செய்யும். இந்தியாவில் நாம் சட்டப்பூர்வமாகச் செயல்பட்டோம். பாகிஸ்தான் சட்டமீறலாகச் செயல்பட்டதென்போம். அங்கேயும் நம் மீது அதே பழியைத்தான் போடுவார்கள்.
கி.பாலமுருகன், கரிசல்புலி.
"சாரி கேட்க வரவில்லை, நீதி கேட்க வந்திருக்கிறோம்' என்று பேசியவரின், 116-நாள் ஆட்சியில் 8 காவல் மரணங்கள் நடந்திருப்பதாக உதயநிதி பட்டியலிடுகிறாரே?
அரசியல்வாதிகள் அடுத்தவர் ஆட்சியில் மட்டும்தான் நீதி கேட்கிறார்கள். சொந்த ஆட்சியில் நீதியைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. த.வெ.க. வருத்தம் தெரிவிப்பதை பற்றிக்கூட அக்கறைப்படுவ தில்லை. ரீல்ஸ் போட்டாலே ஓட்டளித்துவிடும் மக்கள் இருக்கையில், சாரி சொல்லி ஸ்டேட்டஸைக் குறைத் துக்கொள்ளவேண்டுமா என்று நினைக்கிறார்கள் போல!
தென்னையில் தேள் கொட்டினால் பனை மரத்தில் ஏன் நெறி கட்டுகிறது?
சமூக ஆர்வலர் ஒருவர், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேட்டுப்பெற்ற தகவலின்படி 2022 முதல் 2026 வரை இந்திய ரயில் வண்டிகளின் ஏ.சி. கோச்சுகளில் 1.27 கோடி படுக்கை விரிப்புகள், போர்வைகள் காணாமல் போயுள்ளதாம். இதனால் ரயில்வேக்கு 104 கோடி இழப்பு. உண்மையில் ரயில்வே, துணிகள் பராமரிப்பை தனியாருக்குக் கான்ட்ராக்டுக்கு விட்டுவிடுவதால், விரிப்புகள் காணாமல்போனால், அதற்கான இழப்பை கான்ட்ராக்டர்தான் கொடுக்கவேண்டும். அவரும் அதைக் கையிலிருந்து கொடுப்பதில்லை. அவர் துணிகளை மடித்து எடுத்துவைக்க தொழிலாளி ஒருவரை நியமித்திருப்பார் அல்லவா! அவர் தலையில்தான் இந்த நட்டம்வந்து விடியுமாம். இவர் களது சம்பளமே 15,000-லிருந்து 20000-க்குள்தான் இருக்கும். இப்படி காணாமல்போகும் விரிப்புகளால் பலசமயம் மாதம் 2000 முதல் 2500 வரை பிடித்துக்கொள்வதும் நடக்குமாம். அற்ப ஆசையில் நாம் தூக்கிச்செல்லும் போர்வை, விரிப்பால், தொழிலாளியின் சோற்றில் மண் விழுகிறது.
பஞ்சாப் வாக்காளர் பட்டியலில் பா.ஜ.க. எம்.பி. ராகவ் சத்தா பெயர் நீக்கப்பட்டிருப்பது பற்றி?
வாக்காளர் பட்டியலில் ஒவ்வொரு முறையும் எதிர்க்கட்சித் தலைவர்கள் பெயர் விடுபடுகிறது. ராணுவ அதிகாரிகள் பெயர் விடுபடுகிறது. பா.ஜ.க.வை எதிர்க்கும் நடிகர்கள் பெயர் விடுபடுகிறது. பா.ஜ.க.வுக்கு வாக்களிக்கமாட்டார்கள் எனச் சந்தேகிக்கும் சிறுபான்மையினர், பிற சமூகத்தினர் வாக்குகள் விடுபடுகிறது. ஆளுங் கட்சிக்காரன் ஒருவர் பெயரும் விடுபடுவதில்லையே என மக்கள் சந்தேகப்படக்கூடாதல்லவா அதற்குத்தான்.
மதுரை நியோ மேக்ஸ் மோசடி வழக்கே முடிய வில்லை. அதற்குள் எஃப்.க்யூ.எல். மோசடியா… தமிழக பொருளாதாரக் குற்றப்பிரிவு என்ன செய்கிறது?
தமிழகப் பொருளாதாரக் குற்றப்பிரிவு இன்னும் கொஞ்சம் சுதாரிப்பாக இருக்கவேண்டு மென்பது உண்மைதான். ஆனால், பேராசையில் ஏமாற்றுத் திட்டங்களை நோக்கி, விளக்கை நோக்கி ஈர்க்கப்படும் பூச்சிகளை நோக்கிப் பறப்பவர்களை யாராலும் தடுக்கமுடியாது.
ராமராஜன் - இளையராஜா கூட்டணி களமிறங்குகிறதாமே?
தலைமுறை மாறிவிட்டது. அவர்களுக்கு ராமராஜனையும் தெரியாது. இளையராஜா மெலடிகள் பிடிக்குமா என்றும் உறுதி சொல்ல முடியாது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)