Politics
அ.தி.மு.க., நிர்வாகிகளால் ஜொலித்த அண்ணா சிலை
விழுப்புரம்: விழுப்புரத்தில் அ.தி.மு.க., நிர்வாகிகள் அண்ணாதுரை சிலைக்கு ஜொலிக்கும் சட்டை, பழமாலை அணிவித்து வித்தியாசமான முறையில் பிறந்தநாளை கொண்டாடினர்.
அண்ணாதுரை 118 வது பிறந்தநாளையொட்டி, விழுப்புரத்தில் அண்ணாதுரை சிலைக்கு தி.மு.க., அ.தி.மு.க., உட்பட பல்வேறு அரசியல் கட்சி நிர்வாகிகள் மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்த நிலையில், விழுப்புரம் பழைய நகராட்சி அலுவலகம் முன்புள்ள அண்ணாதுரை சிலைக்கு, அ.தி.மு.க., நிர்வாகிகள் ஜொலிக்கும் நிறத்தில் சட்டையையும், கட்சி வேட்டியையும் கொண்டு வந்து மாட்டி விட்டனர். பின், அண்ணாதுரை சிலைக்கு பழங்களால் ஆன மாலையை போட்டு வித்தியாசமான முறையில் பிறந்தநாளை கொண்டாடினர்.
விழுப்புரத்தில் ஆண்டுதோறும் பிறந்தநாளில் மலர் மாலையோடும், மற்ற நாட்களில் காய்ந்த மாலையோடும் டல்லாக காட்சி தரும் அண்ணாதுரை சிலை, நேற்று புதிய சட்டை, வேட்டியோடு ஜொலிக்கும் நிறத்தில் காட்சியளித்தது. இதை கண்ட பொதுமக்கள், வாகனத்தில் சென்றோர் அனைவரும் அண்ணாதுரை சிலையை சற்று நேரம் நின்று வேடிக்கை பார்த்து விட்டு சென்றனர்.
