Arts, culture, entertainment and media
பெண்ணிடம் 6 சவரன் நகை பறிப்பு: மர்ம ஆசாமிகளுக்கு வலை
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே இயற்கை உபாதைக்கு சென்ற பெண்ணிடம் ஆறே முக்கால் சவரன் தங்க நகையை பறித்து சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி அடுத்த மோகூர் கிராமத்தை சேர்ந்த சக்திவேல் மனைவி சரஸ்வதி,54;. இவர் நேற்று முன்தினம் இயற்கை உபாதை கழிப்பதற்காக தனது வீட்டின் அருகே நடந்து சென்றார். அப்போது அவ்வழியாக நடந்து வந்த மர்ம நபர்கள் 3 பேர், திடீரென சரஸ்வதி கழுத்தில் அணிந்திருந்த நகையை பறிக்க முயன்றனர். உடன் சரஸ்வதி தனது நகையை கெட்டியாக பிடித்துக்கொண்டு கூச்சலிட்டுள்ளார்.
இருப்பினும் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வருவதற்குள், மர்மநபர்கள் 3 பேரும் சரஸ்வதி அணிந்திருந்த சுமார் ஆறே முக்கால் சவரன் தங்க நகையை பறித்துக்கொண்டு மின்னல் வேகத்தில் அங்கிருந்து தப்பி சென்றனர்.
பின்னர் அக்கம் பக்கத்தினருடன் அருகில் உள்ள பகுதிக்கு சென்று தேடிபார்த்தும் மர்ம நபர்களை காணவில்லை. பறிபோன நகையின் மதிப்பு சுமார் ரூ.6 லட்சம் ஆகும். இது குறித்து தகவலறிந்த கள்ளக்குறிச்சி போலீசார் சம்பவ இடத்திற்கு பார்வையிட்டு விசாரித்தனர்.
இது தொடர்பாக சரஸ்வதி கொடுத்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து தங்க நகைகளை பறித்து சென்ற மர்ம நபர்களையும் தேடி வருகின்றனர்.