Economy, business and finance
பெட்ரோல், டீசல், விமான எரிபொருள் மீதான ஏற்றுமதி வரி அதிரடி குறைப்பு: மத்திய அரசு அறிவிப்பு

புதுடில்லி: பெட்ரோல், டீசல், விமான எரிபொருள் மீதான ஏற்றுமதி கூடுதல் வரிகளை கணிசமாகக் குறைத்து, மத்திய நிதி அமைச்சகம் அதிரடியாக அறிவித்துள்ளது.
மத்திய அரசின் மறுஆய்வுக் கூட்டம் இரண்டு வாரங்கள் நடந்த நிலையில், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, டீசல் ஏற்றுமதி மீதான கூடுதல் வரி, லிட்டருக்கு ரூ.5 குறைக்கப்பட்டு, தற்போது லிட்டருக்கு ரூ.20 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இது ரூ.25 ஆக இருந்தது; மேலும் இதற்கு முன் விதிக்கப்பட்டிருந்த ரூ.1 சாலை மற்றும் உட்கட்டமைப்பு கூடுதல் வரியும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
விமான எரிபொருளுக்கான ஏற்றுமதி வரி லிட்டருக்கு ரூ. 4 குறைக்கப்பட்டு, தற்போது லிட்டருக்கு ரூ.15 ஆக மாற்றப்பட்டுள்ளது. பெட்ரோல் மீதான ஏற்றுமதி வரி லிட்டருக்கு ரூ.1 குறைக்கப்பட்டு, தற்போது லிட்டருக்கு வெறும் 50 காசுகளாக (ரூ.0.50) குறைக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு விற்பனை விலையில் மாற்றம் உண்டா?
இந்த வரிக்குறைப்பு என்பது வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் எரிபொருட்களுக்கு மட்டுமே பொருந்தும். இந்தியாவில் பொதுமக்கள் பயன்படுத்தும் பெட்ரோல் மற்றும் டீசலுக்கான உள்ளூர் கலால் வரியில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை என்பதால், உள்நாட்டு சில்லறை விற்பனை விலையில் உடனடி மாற்றம் எதுவும் இருக்காது எனத் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.