கொச்சி- - தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கம்

மூணாறு: கொச்சி, தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிகள் நடந்து வரும் நிலையில், பழைய மூணாறில் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட வீதி குறைந்ததாக புகார் எழுந்துள்ளது.
கொச்சி, தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் மூணாறு, கொச்சி இடையே 125 கி.மீ., தூரம் ரூ.1070 கோடி செலவில் ரோடு அகலப்படுத்தும் பணி நடந்து வருகிறது. 5.5 முதல் 7 மீட்டர் வரை இருந்த ரோடு 10 மீட்டர் வீதியில் இருவழி சாலையாக அகலப்படுத்தப்படுகிறது. அதற்கு ரோடுகளில் இயந்திரங்கள் மூலம்
மண் எடுக்கப்பட்டும், கட்டடங்கள் அகற்றப்பட்டும் பணிகள் நடக்கின்றன.
தேசிய நெடுஞ்சாலை கடந்து செல்லும் பழைய மூணாறு பகுதியில் 16 கட்டடங்கள் இடையூறாக உள்ளதாக கண்டறியப்பட்டு, அவற்றில் குறிப்பிட்ட தூரம் அடையாளப்படுத்தப்பட்டது. அவற்றை கட்டட உரிமையாளர்கள் தாமாக அகற்ற வேண்டும் என கடந்தாண்டு அதிகாரிகள் நோட்டீஸ் அளித்தனர். ஆனால் பழைய மூணாறு பகுதியில் கட்டடங்கள் எதுவும் அகற்றாமல் பணிகள் நடப்பதால், நிர்ணயிக்கப்பட்ட அளவை விட வீதி குறைந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. அப்பகுதியில் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட ரோடு குறுகலாக உள்ளதாக கூறி எதிர்ப்புகள் வலுத்துள்ள நிலையில், இந்திய இளைஞர் பெருமன்றம் உள்பட பல்வேறு அமைப்பினர் போராட்டங்கள் நடத்தினர். நிர்ணயிக்கப்பட்ட அளவில் ரோடு விரிவாக்கம் செய்யாவிட்டால், அப்பணிகளை தடுத்து நிறுத்து போராட்டங்கள் நடத்த பல்வேறு அமைப்பினர் தயாராகி வருகின்றனர்.