திட்டம் பேரூராட்சிகளில் குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க சிறப்புரூ.2.21 கோடியில் ஆழ்துளை கிணறுகள் அமைக்க முடிவு

தேனி, செப். 9–தேனி மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகளில் நிலவும் குடிநீர் மற்றும் தண்ணீர் தட்டுப்பாட்டை சமாளிக்க ரூ.2.21 கோடியில் 29 ஆழ்துளை கிணறுகள், 3 உறைகிணறுகள் அமைக்கும் பணிகள் விரைவில் துவக்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தேனி மாவட்டத்தில் 22 பேரூராட்சிகள் உள்ளன. இதில் ஒரு சில பேரூராட்சிகள் முல்லைப்பெரியாறு, கொட்டக்குடி, ஆற்றங்கரையில் அமைந்துள்ளன. மற்ற பேரூராட்சிகள் தண்ணீர் தேவைக்காக குடிநீர் வடிகால் வாரிய திட்டங்களை சார்ந்துள்ளன. மாவட்டத்தில் இந்த ஆண்டு கோடை மழை, தென்மேற்கு பருவமழை போதிய அளவு பெய்யாததால் பல்வேறு பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கண்மாய்கள் குளங்களில் தண்ணீர் இன்றி வறண்டு காணப்படுகின்றன. இதனால் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து விவசாயம், கால்நடைகள் பாதிக்கப்படுகின்றன. தற்போதைக்கு முல்லைப்பெரியாறு அணையில் தண்ணீர் திறக்கப்பட்டள்ளதால் பெரியாற்றங்கரை பகுதிகளில் மட்டும் தண்ணீர் தட்டுப்பாடு குறைவாக உள்ளது.
முழு அளவு குடிநீர் வழங்க முடியாத நிலை: ஆண்டிபட்டி தாலுகாவிற்கு உட்பட்ட பகுதிகள், தேனி தாலுகாவிற்கு உட்பட்ட பல கிராமங்கள், போடி, பெரியகுளம் தாலுகாவில் குறிப்பிட்ட சில பகுதிகளில் தண்ணீர் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. தண்ணீர் தட்டுப்பாட்டை சமாளிக்க உள்ளாட்சி நிர்வாகங்கள் பல்வேறு நடவடிக்கைகளை எடுக்க திட்டமிட்டுள்ளன.ஆறுகள், அணைகளில் குறிப்பிட்ட அளவு மட்டும் தண்ணீர் உள்ளதால் குடிநீர் வடிகால் வாரிய திட்டங்களிலும் முழுமையாக தண்ணீர் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பேரூராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது: வறட்சி பாதிப்பு ஏற்பட்டால் பாதிக்க கூடிய பேரூராட்சி பகுதிகள் பற்றி கணக்கெடுக்கப்பட்டுள்ளது. அந்த பகுதிகளில் மாநில பேரிடர் மேலாண்மை நிவாரண நிதி ரூ.2.21 கோடியில் புதிய ஆழ்துளைகிணறுகள், உறைகிணறுகள், பழைய ஆழ்துளை கிணறுகளை துார்வாரி பயன்பாட்டிற்கு கொண்டு வர அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதன்படி மாவட்டத்தில் தேவதானப்பட்டி பேரூராட்சியில் 7, மார்க்கையன்கோட்டையில் 5, பூதிப்புரத்தில் 4 என மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகளில் மொத்தம் 29 புதிய ஆழ்துளை கிணறுகள், மீனாட்சிபுரம், பூதிப்புரம், கெங்குவார்பட்டியில் புதிதாக உறைகிணறுகள், இது தவிர 5 பழைய ஆழ்துளை கிணறுகள் துார்வாரும் பணி துவங்க உள்ளது. இதனால் தண்ணீர் தட்டுப்பாட்டை சில மாதங்கள் சமாளிக்க இயலும் என்றனர்.