Arts, culture, entertainment and media
படிப்பறை: டாட்டூ - சரிதா ஜோ

வெறும் காட்சிகளாக மட்டும் விவரிக்காமல், கனவின் அடிப்படை, டாட்டூவின் வரலாறு எனப் பல முக்கிய விஷயங்களைப் பேசுகிறது இந்த நூல்
வெளியீடு: ஆலா பதிப்பகம், 171/5, இந்து நகர், பழைய பாளையம், மெரினா ஹோட்டல் எதிரில், ஈரோடு – 638 012.
தொலைபேசி: 99407 16606.
மனிதகுலம் அன்றாடம் எதிர்கொள்ளும், அதேநேரத்தில் பொதுவெளியில் பேசத் தயங்கும் ஒரு முக்கியமான பிரச்னைதான் இந்த நாவலின் மையப் பொருள். அந்தத் தடையை உடைக்கவேண்டிய அவசியத்தை எளிமையான, உணர்வுபூர்வமான காட்சிகளாக விவரிக்கிறார் எழுத்தாளர் சரிதா ஜோ. `இளையோர் நாவல்’ என்ற அழுத்தமான உப தலைப்பு நாவலை கவனம்கொள்ள வைக்கிறது.
`காடு தன் கண்களைக் கசக்கிக்கொண்டிருந்தது’ என்கிற முதல் வரியே நம்மைக் கையைப் பிடித்து இழுத்து கதைக்குள் உட்காரவைத்துவிடுகிறது. மாயா கல்லூரி மாணவி. கனவு காண்கிறாள். காடு. சுற்றி எரியும் தீ. நடுவில் மாட்டிக்கொண்டு தவிக்கிறாள். இன்னொரு கனவில் கடலில் தத்தளிக்கும் மாயாவைத் திமிங்கிலங்கள் சூழ்ந்துகொள்கின்றன. மற்றொரு கனவில் பாலைவனம். கடும் வெப்பம். தொண்டையை வறட்டும் தாகம். அதோடு மணலிலிருந்து எழும் பூதங்கள் அவளை விரட்டுகின்றன. நெருப்பை உமிழ்ந்தபடி அவளை விழுங்கத் துடிக்கும் டிராகன், உடலை இறுக்கும் பாம்பு… இப்படிக் கனவுகள்.
மாயாவின் அம்மாவும் அப்பாவும் அவளை மனநல மருத்துவர் பாமினியிடம் அழைத்துப் போகிறார்கள். பாமினி, தங்கை அர்ஷா, தன் தோழிகள் ஆகியோரின் உதவியுடன் அச்சமூட்டும் கனவுகளுக்கான காரணத்தை மாயா எப்படிக் கண்டுபிடிக்கிறாள்… அவற்றிலிருந்து எப்படி மீண்டெழுகிறாள் என்பதுதான் கதை. பாட்டி, தாத்தா, டாட்டூ கலைஞர், அர்ஷா, தோழி நட்சத்திரா என நாவலில் வந்து போகும் அத்தனை மனிதர்களும் மனதில் நிற்கிறார்கள்.
வெறும் காட்சிகளாக மட்டும் விவரிக்காமல், கனவின் அடிப்படை, டாட்டூவின் வரலாறு எனப் பல முக்கிய விஷயங்களைப் பேசுகிறது இந்த நூல். `உளவியலின் தந்தை’ சிக்மண்ட் ஃபிராய்டின் `தி இன்டர்பிரட்டேஷன் ஆஃப் டிரீம்ஸ்’, இன்றைக்கும் பல மனநல மருத்துவர்களுக்கு வழிகாட்டியாக விளங்கும் புத்தகம். அந்த நூலிலிருந்து எழுத்தாளர் சரிதா ஜோ கனவுகளுக்கான காரணங்களை அடுக்குவது ஆச்சர்யம்கொள்ள வைக்கிறது. அதேபோல, `அவள் கண்களில் இருளும் ஒளியும் மாறி மாறித் தெரிந்தன. அது, கனவின் வேதனையாகவும், உணர்வின் வெளிச்சமாகவும் இருந்தது’ என அநாயாசமாக வந்து விழுகிற வரிகள் ஈர்த்துவிடுகின்றன. டாட்டூவைப் பற்றிச் சொல்லும்போது, `இந்தக் கலை மனிதகுல வரலாற்றில் மிகப் பழைமையான உடல் அலங்காரங்களில் ஒன்று’ என்கிறார் நூலாசிரியர். உலக அளவில் வலியைத் தாங்கிக்கொண்டு ஏராளமானவர்கள் ஏன் டாட்டூ போட்டுக்கொள்கிறார்கள் என்பதற்கான காரணத்தையும் சொல்கிறார்.
மேஜிக்கல் ரியலிச பாணியில் எழுதப்பட்ட இந்த நாவல் ஓர் உளவியல் பயணம். `கனவுகள் வெறும் காட்சிகள் அல்ல… நம் ஆழ்மனதின் மொழி’ என்கிற சிக்மண்ட் ஃபிராய்டின் கூற்றுக்கு முழு நியாயம் சேர்க்கிறது இந்த நாவல்.
