கருவேல மரங்கள், மண் திருட்டால் வீணான நாகம்பட்டி பெரியகுளம்
வேடசந்துார்:நாகம்பட்டி பெரியகுளத்தில் கூடுதலாக தண்ணீரை சேமிக்கும் வகையில் சீமை கருவேல மரங்களை அகற்ற வேண்டும், குளத்தை துார்வாரி சீரமைப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
வேடசந்துார் நகரை ஒட்டி நாகம்பட்டி ஊராட்சியில் 80 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது பெரியகுளம். கருமலை பூவாய்பாளையம் பகுதியில் உற்பத்தியாகி நவாலுாத்து வழியாக வரும் தண்ணீரால் தப்பாரை குளம் நிறைந்து, சேனன்கோட்டை பகுதியில் சிற்றோடை வழியாக இந்த குளத்திற்கு தண்ணீர் வருகிறது. கோடாங்கிபட்டி, ஒட்டநாகம்பட்டி வழியாக வரும் சிற்றோடையில் இருந்தும் தண்ணீர் வருகிறது. இந்த குளம் நிறைந்தால் வேடசந்துார், தம்மனம்பட்டி, கருக்காம்பட்டி முதலியார்பட்டி, நாகம்பட்டி உள்ளிட்ட சுற்றியுள்ள பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு இருக்காது.
இந்நிலையில் போதிய பராமரிப்பு இல்லாததால் குளத்தில் சீமை கருவேல மரங்கள் நிறைந்து முள்காடாய் காட்சியளிக்கிறது. மண் திருட்டால் குளம் முழுவதும் குண்டும் குழியுமாக காணப்படுகிறது.
குளத்தில் கருவேல மரங்களை முற்றிலுமாக அகற்றி, குளத்தை சுத்தப்படுத்தி, கரையை பலப்படுத்தினால் கூடுதலாக தண்ணீரை தேக்கி வைக்க முடியும். இது சுற்றியுள்ள பகுதிகளுக்கு நீர் ஆதாரமாக அமையும். இதுகுறித்து வேடசந்துார் ஒன்றிய நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
நாகம்பட்டி பெரியகுளத்தின் கிழக்கு பகுதி முழுவதும் சீமை கருவேல மரங்கள் நிறைந்துள்ளது. கடந்த காலங்களில் தொடர் செம்மண் திருட்டால் குளமே குண்டும் குழியுமாக உள்ளது. குளத்தை முறையாக துார்வாரி தண்ணீரை தேக்கினால் வேடசந்துார், கருக்காம்பட்டி, தம்மனம்பட்டி உள்ளிட்ட சுற்றியுள்ள குடிநீர் பிரச்னை என்பதே இருக்காது.
அய்யனாரப்பன் ஓடையில் குன்னம்பட்டி அருகே தடுப்பணை கட்டியதால் இந்த குளத்திற்கு சிறிதளவே தண்ணீர் வருகிறது. எஞ்சிய நீரானது அய்யனாரப்பன் ஓடை வழியாக குடகனாற்றுக்கு சென்று விடுகிறது. இதனாலும் குளம் ஒவ்வொரு ஆண்டும் நிறைவதில்லை.
குளத்தை சுற்றிலும் ஏராளமான வீடுகள் வந்து விட்டதால் குளத்தில் கூடுதலான தண்ணீரை தேக்கி வைக்க முடியவில்லை. மக்களின் பாதுகாப்பு கருதி தண்ணீரை திசை மாற்றிவிட்டனர் என்பதே உண்மை.
ராஜமோகன், சமூக ஆர்வலர், வேடசந்துார்.
நாகம்பட்டி பெரிய குளத்தில் மூடி கிடக்கும் கருவேல முட்களை ஒட்டுமொத்தமாக அகற்ற வேண்டும். குளத்தின் உட்பகுதியை நிரவி, கரையை பலப்படுத்தி தண்ணீரை தேக்கி வைக்க வேண்டும். அடுத்து மழைக்காலம் துவங்க உள்ளதால் இப்பணிகளை விரைந்து செய்ய வேண்டும். வரும் காலங்களில் வறட்சி ஏற்பட்டாலும் சுற்றியுள்ள பகுதி மக்கள் குடிநீர் பிரச்னை இன்றி இருக்க முடியும். ஒன்றிய நிர்வாகம் இதற்கான பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
