Arts, culture, entertainment and media
“முதலமைச்சருக்கு நிறைய பொறுப்புகள் இருக்கிறது” - விஜய் தொடர்பான கேள்விக்கு ஜேசன் சஞ்சய் பதில்

முதல்வர் விஜய்யின் மகனான ஜேசன் சஞ்சய், இயக்குநராக அறிமுகமாகும் படம் ‘சிக்மா’. இதில் சந்தீப் கிஷன் நாயகனாக நடித்துள்ளார். இவரோடு ஃபரியா அப்துல்லா, ராஜு சுந்தரம், சம்பத் ராஜ், ஷிவ் பண்டிட் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தை லைகா மற்றும் ஜேசன் சஞ்சை இருவரும் தயாரித்துள்ளனர். தமன் இசையமைத்துள்ளார். இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாக்கப்பட்டு அக்டோபர் 2ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதனால் படக்குழுவினர் சமீப மாதங்களாக புரமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில் முதலில் சேலத்தில் படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி நடந்தது. இதையடுத்து தெலுங்கு பதிப்பை விளம்பரப்படுத்தும் வகையில் ஹைதராபாத்தில் செய்தியாளர்கள் சந்திப்பு நடந்தது. இதில் படக்குழுவினர் கலந்து கொண்டு செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தனர். அந்த வகையில் ஜேசன் சஞ்சயிடம், உங்களது அப்பா முதல்வர் விஜய் இந்த படத்தை பற்றி என்ன நினைக்கிறார்? என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “அவரும் படத்தின் வெளியீட்டிற்காகக் காத்திருக்கிறார். ஆனால் பட புரொமோஷனில் அவர் கலந்து கொள்ள மாட்டார். புரொமோஷன் என்பது இந்தப் படத்தைப் பற்றியதாகவே இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அது மற்ற விஷயங்களுடன் கலப்பதை நான் விரும்பவில்லை. மேலும், அவர் இன்று முதலமைச்சராக இருப்பதால், அவருக்குப் பல பொறுப்புகள் இருக்கிறது. அவர் முதலமைச்சராக பதவியேற்றபோது நானும் என்னை சுற்றியுள்ள அனைவரும் மிகவும் மகிழ்ச்சியடைந்தோம்” என்றார்.
தொடர்ந்து பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்த அவர், “நான் முதன் முதலில் சினிமாவிற்கு செல்லவுள்ளது பற்றி என் பெற்றோர், சகோதரி மற்றும் நண்பர்கள் என அனைவரிடமும் பேசினேன். அவர்கள் அனைவரும் மிகுந்த பாசிட்டிவான கருத்துகளையே தெரிவித்தனர். அது எனக்குப் பெரும் ஊக்கத்தை கொடுத்தது. என் மீது அவர்கள் எவ்வளவு நம்பிக்கை வைத்திருந்தார்கள் என்பதை அப்போதுதான் நான் முழுமையாக உணர்ந்தேன். 'சிக்மா' படப்பிடிப்பு தொடங்கியபோது, விஜய் சேதுபதி சார், சூரி சார் மற்றும் பலர் எனக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர். பலரின் ஆசிகளையும் நான் பெற்றேன். இப்படத்தை அடுத்து என் மனதில் இரண்டு அல்லது மூன்று நல்ல கதைகள் இருக்கிறது. 'சிக்மா' வெளியான பிறகு அக்கதையை உருவாக்கும் பணிகளைத் தொடங்குவேன்” என்றார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)