Crime, law and justice
நீதிமன்றங்களில் 90 நாட்கள் சமரசதீர்வு முகாம்: அக்.,1 ல் துவக்கம்
ராமநாதபுரம்: நிலுவை வழக்குகளுக்கு தீர்வு காண ராமநாதபுரம் மாவட்ட நீதிமன்றங்களில் 90 நாட்கள் சிறப்பு சமரச தீர்வு முகாம் நடக்கவுள்ளதாக முதன்மை மாவட்ட நீதிபதி டி.வி.மணி தெரிவித்தார்.
உச்ச நீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்றம் வழிகாட்டுதல் படி ‘சிறப்பு சமரச முகாம் 3.0’ மாவட்ட மற்றும் தாலுகா நீதிமன்றங்களில் அக்.,1 முதல் டிச., 31 வரை நடைபெறவுள்ளது. பொதுமக்கள் சமரச தீர்வு முகாமில் பங்கேற்பதை ஊக்குவிப்பதற்கான துண்டு பிரசுரங்கள் விநியோகம் செய்வதை முதன்மை மாவட்ட நீதிபதி டி.வி.மணி துவக்கி வைத்தார். அவர் கூறியதாவது:
@தேசத்திற்காக சமரசம் 3.0’ என்ற இயக்கத்தின் அடிப்படையில் நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வழக்குகளை சமரச முறையில் தீர்த்துக் கொள்ளலாம். சமரசத்திற்கு உட்பட்ட உரிமையியல் வழக்குகள், குடும்ப தகராறுகள், வாகன விபத்து நஷ்டஈடு, காசோலை மோசடி, நுகர்வோர் மற்றும் வணிக கடன் தொடர்பான வழக்குகள், நில எடுப்பு, தொழிலாளர் நல வழக்குகள், சமரசத்திற்குரிய குற்றவியல் வழக்குகள் எடுத்துக் கொள்ளப்படும். இந்த முகாமில் பயிற்சி பெற்ற வழக்கறிஞர்கள் சமரசத்தின் நன்மைகள் குறித்து எடுத்துக் கூறி விரைந்து தீர்வு காண உதவி புரிவர். இதன் மூலம் நீதிமன்றங்களின் சுமை குறைவதுடன், பொதுமக்களின் கால விரயமும் தவிர்க்கப்படும். இதுகுறித்த விவரங்களுக்கு மாவட்ட, தாலுகா நீதிமன்றங்களில் இயங்கும் சமரச மையங்களையும், தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் இலவச உதவி எண் 15100 ல் தொடர்பு கொள்ளலாம் என்றார்.
ராமநாதபுரம் மாவட்ட நீதிபதிகள், வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள், வழக்கறிஞர்கள், நீதிமன்ற அலுவலர்கள் பங்கேற்றனர்.