Arts, culture, entertainment and media
திண்டுக்கல் பேனர். :: எப்போது புதிய பட்டு வளர்ச்சித்துறை கட்டடங்கள் கட்டப்படுவது... உயிர் பயத்தில் நாட்களை நகர்த்தும் துறை அலுவலர்கள்
திண்டுக்கல்: 1984ல் கட்டப்பட்டு 45 ஆண்டுகள் பயன்பாட்டிற்கு பின் திண்டுக்கல் பட்டுவளர்ச்சித் துறையின் உதவி இயக்குனர் அலுவலக கட்டடமும், அத்துறையை சார்ந்த பிற மூன்று கட்டடங்களும் சிதிலமடைந்து எழும்புகூடாக உயிர்பலி வாங்க காத்திருக்கின்றன. இதனால் அப்பகுதி வழியே பணிக்கு செல்லும் உதவி இயக்குனர் உட்பட துறை அலுவலர்கள் உயிர் பயத்தில் நாட்களை நகர்த்தும் அவலம் தொடர்கிறது.
திண்டுக்கல் பழநி பைபாஸ் ரோட்டில் மாவட்ட பட்டுவளர்ச்சித் துறை உதவி இயக்குநர் அலுவலகம் உள்ளது. இந்த வளாகத்தில் 1984ல் 6853 சதுரடியில் உதவி இயக்குநர் அலுவலக கட்டடத்துடன் கூடிய பெரிய கட்டடம் கட்டப்பட்டது. இதில் முதல் தளத்தில் அலுவலர் குடியிருப்புகள், தரைத்தளத்தில் பட்டுக்கூடுகள் சேகரிப்பு மையம் இயங்கி வந்தன. அதற்கு நேரெதிரே உள்ள கட்டடத்தில் பட்டுக்கூடு விற்பனை வணிகப் பிரிவு மையமும், துறையின் பிற பிரிவுகளும் இயங்கின.
அக்கட்டடத்தின் பின்புறம் மல்பெரிச் செடிகள் வைத்து வளர்க்கும் பட்டுப்புழுக்கள் வளர்ப்பு மையமும், அதன் பின்புறம் உள்ள பகுதியில் அலுவலர்களுக்கான கழிப்பறையும் இயங்கி வந்தது. இந்த கட்டடங்கள் நீண்ட காலங்களாக குறிப்பாக 1984 முதல் தற்போது வரை 45 ஆண்டுகளாக அரசின் காலாவதி தேதிக்கு பின்பும் பயன்பாட்டில் இருந்தது. தற்போது இந்த கட்டடங்கள் எழும்புகூடுகளாக காட்சியளிக்கின்றன. இவற்றை இடித்து தரை மட்டமாக்க வேண்டும் என, துறை சார்பில் பட்டுவளர்ச்சித் துறை இயக்குனருக்கு கோரிக்கை விடப்பட்டது. அதன்படி உதவி இயக்குனர் அலுவலகம் அதனுடன் இணைந்த கட்டடத்தை இடித்துவிட்டு, புதிதாக கட்ட ரூ.2 கோடிக்கு திட்ட அறிக்கை தயார் செய்து, துறை இயக்குனருக்கு அனுப்பப்பட்டது.
பரிந்துரைக்கப்பட்ட திட்ட அறிக்கையில் கட்டடத்தை இடிக்க ஆகும் செலவை வழங்க இயலாது என, கட்டுமான பணிகள் துவங்க முட்டுக்கட்டை போடப்பட்டது. அதன்பின் தொடர் கோரிக்கையின் படி ரூ.2 கோடி நிதி வழங்க துறை ஒப்புக் கொண்டது. இந்நிலையில் துறை அலுவலர்கள் கலெக்டர் துர்காவிடம் நேரில் ஆய்வு செய்து, பாதுகாப்புடன் இடிக்க நடவடிக்கை எடுக்கக் கோரினர். தற்போது உள்ள அலுவலகத்தில் உதவி இயக்குநர் உட்பட ஆண், பெண் ஊழியர்கள் ஸ்டோர் அறையில் கூரைக்கு கீழ் வெயிலில் இருந்து தப்பித்து கொள்ள ‛தெர்மோகோல்’ மேவப்பட்ட அறையில் உதவி இயக்குநர் அலுவலகம் இயங்கி வருகிறது. பொதுப் பணித்துறையின் கட்டடப்பிரிவு பொறியாளர்களும் 22 முறை நேரடியாக ஆய்வு செய்தும் பணிகள் துவங்காமல் இருப்பதால், உயிர்பலி வாங்க காத்திருக்கும் கட்டடம் விபத்து அபாயத்தில் எலும்பு கூடாகவே இன்றளவும் அச்சத்தை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது.