Science and technology
ஏ.ஐ., தொழில் நுட்பத்தால் வேலை இழப்பு நிச்சயம் அரசு பள்ளி கருத்தரங்கில் தகவல்
குன்னுார்: குன்னுார் அறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப் பள்ளியில், அறிவியல் கருத்தரங்கு கோளரங்கம், ஹாலோ கிராம் போன்ற நிகழ்ச்சிகள் நடந்தன.
குன்னுார் கலை மற்றும் அறிவியல் கல்லுாரி முதல்வர் முனைவர் சணில் தலைமை வகித்தார். அறிஞர் அண்ணா அரசு மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியை சிவசக்தி முன்னிலை வகித்தார்.
கருத்தாளராக பங்கேற்ற, தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில கருத்தாளர் ராஜு பேசியதாவது:
முன்பு உடல் உழைப்பு செல்வமாக கருதப்பட்டது. பின்னர் மூளை உழைப்பை பயன்படுத்திய மக்கள் செல்வந்தர்களாக மாறினர். இன்று உடல் உழைப்பு மற்றும் மூளை உழைப்பை பின் தள்ளிய, நவீன ‘ஆர்டிபிஷியல்’ தொழில்நுட்பம் இன்று தாமே சிந்தித்து, கற்று கொண்டு நவீன உலகை ஆள்கிறது. ‘இந்த நுண்ணறிவு தொழில் நுட்பத்தால் (ஏ.ஐ.) மூன்றில் இரு பங்கு மக்கள் வேலைவாய்ப்பை இழக்கும் ஆபத்து உள்ளது,’ என, விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.
சிந்திக்கும் திறன் படைத்த இயந்திரங்களை உருவாக்கும் ஆற்றல் பெற்ற இளைஞர்களுக்கு மட்டும் வேலை வாய்ப்பும், செல்வமும் கைகூடும். மாணவர்கள் சிறந்து விளங்க வேண்டுமெனில் தங்கள் மூளையின் முழு ஆற்றலை பயன்படுத்த வேண்டும். மூளையின் செயல்பாடுகளை பாதிக்கும் போதை வஸ்துகளை மாணவர்கள் முற்றிலும் தவிர்க்க வேண்டும். இவ்வாறு ராஜு பேசினார். உபதலை சாய் நிவாஸ் அறக்கட்டளை நிர்வாகி சாய்ராம் ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவிகளை வழங்க தயாராக இருப்பதாக கூறினார்.
தொடர்ந்து, குன்னுார் கலை அறிவியல் கல்லுாரி உதவி முதல்வர் முனைவர் பாலசுப்ரமணியம், விரிவுரையாளர் ஜோதிலட்சுமி ஆகியோர் பேசினர். மாணவர்கள் கோளரங்கத்தை கண்டு ரசித்தனர். ‘ஹாலோ கிராம்’ வாயிலாக அப்துல் கலாம் மற்றும் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் போன்ற விஞ்ஞானிகளை நேரில் சந்திக்கும் அனுபவத்தை பெற்றனர். அரசு பள்ளி ஆசிரியை செல்வமணி வரவேற்றார். அறிவியல் இயக்க நிர்வாகி அபு நன்றி கூறினார்.