கஞ்சா தர மறுத்தவருக்கு அடி, உதை மனைவிக்கும் கத்திக்குத்து
சிவகாசி: விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் கஞ்சா தர மறுத்த அசாம் வாலிபரை அடித்த நபர்கள், தடுக்க வந்த அவரது மனைவியை கத்தியால் குத்தினர்.
அசாம் மாநிலம் கம்புரூப் பகுதியைச் சேர்ந்தவர் தன்சூர் அலி 21. இவர் மனைவியுடன் அய்யம்பட்டியில் தங்கி தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு கஞ்சா பயன்படுத்தும் பழக்கம் உள்ள நிலையில் அசாம் சென்று வரும்போது கஞ்சா வாங்கி வருவார்.
இவருக்கு அதே தொழிற்சாலையில் லோடு மேனாக வேலை செய்துவரும் அய்யம்பட்டியைச் சேர்ந்த கருப்பு என்பவர் பழக்கம் ஏற்பட்டு அவருக்கும் கஞ்சா கொடுத்துள்ளார்.
கருப்பு தனது நண்பர்களான முனீஸ் நகரை சேர்ந்த பெரியசாமி 26, நவீன்பிரசாத் 18, கதிர், மனோ ஆகியோருக்கும் அறிமுகப்படுத்தி கஞ்சா வாங்கி தந்துள்ளார். இந்நிலையில் இவர்கள் கஞ்சா கேட்டபோது இல்லை என தன்சூர் அலி கூறியுள்ளார்.
ஆத்திரமடைந்த ஐந்து பேரும் தன்சூர் அலியை அடித்தனர். தடுக்க வந்த அவரது மனைவி நஜிமா பேகத்தையும் கத்தியால் குத்தினர். பெரியசாமி, நவீன் பிரசாத்தை கைது செய்த மாரனேரி போலீசார் மற்றவர்களை தேடுகின்றனர்.