Economy, business and finance
சாலையை ஆக்கிரமித்து வியாபாரம் வடலுாரில் பொதுமக்கள் அவதி

வடலுார்: வடலுார் வாரச்சந்தையால் கடலுார்–சேலம் நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதால் பொதுமக்கள் அவதியடைந்தனர்.
மாவட்டத்தின் முக்கிய வார சந்தையாக வடலுார் வாரச்சந்தை உள்ளது. வாரந்தோறும் சனிக்கிழமையில் சந்தை நடக்கிறது. இங்கு அதிகாலை 5:00 மணி முதல் ஆடு, கோழி, காடை, முயல், வாத்து, மீன், புறா வியாபாரம் துவங்குகிறது.
வடலுாரை சுற்றியுள்ள பகுதிகள் தவிர பிற மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் இங்கு வந்து ஆடுகளை மொத்தமாக விலைக்கு வாங்கி செல்கின்றனர். காய்கறி, பழங்கள், புளி, மண்பாண்ட பொருட்கள், விதைகள், மரக்கன்றுகள், துடைப்பம் உள்ளிட்ட வீட்டு பலதரப்பட்ட உபயோக பொருட்கள் விற்பனை சந்தையின் மற்றொரு பகுதியான செல்லியம்மன் கோவில் பகுதியை சுற்றி நடக்கிறது.
வியாபாரிகள் சாலையை ஆக்கிரமித்து வியாபாரம் செய்வதால் கடலுார்–விருத்தாச்சலம் மெயின் ரோட்டில் சனிக்கிழமைகளில் அதிகாலை நேரம் மற்றும் மாலை முழுவதும் போக்குவரத்து தடைபடுவது தொடர் கதையாக உள்ளது. அந்த வகையில் நேற்று நடந்த வாரச்சந்தையின் போது, வியாபாரிகள் சாலையை ஆக்கிரமித்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
வடலுார் நகராட்சி நிர்வாகம் மற்றும் போலீசார் இணைந்து போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் வாரச்சந்தை நடைபெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் ோரிக்கை விடுத்துள்ளனர்.