அம்மா உணவக ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு
தாம்பரம்: தாம்பரம் மாநகராட்சியில், மேற்கு தாம்பரம், கிழக்கு தாம்பரம், காமராஜபுரம், கீழ்க்கட்டளை, பல்லாவரம், பம்மல், அனகாபுத்-துார் ஆகிய ஏழு இடங்களில் அம்மா உணவகங்கள் உள்ளன. இவற்றில் தலா 10 பேர் வீதம், மகளிர் சுய உதவிக்குழுக்களைச் சேர்ந்த, 70 பேர் பணிபுரிகின்றனர்.
இவர்களுக்கு தலா 325 ரூபாய் ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஊதியம் போதுமானதாக இல்லை என்றும், ஊதியத்தை உயர்த்த வேண்டும் என்றும், ஐந்து ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், ஊழியர்களின் கோரிக்கையை ஏற்று, ஊதியத்தை உயர்த்த மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அதன்படி, சமையலருக்கு 844 ரூபாய், உதவி சமையலருக்கு 805 ரூபாய், உதவியாளருக்கு 767 ரூபாய் என உயர்த்தி வழங்க, சமீபத்தில் நடந்த மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த தீர்மானம் அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது.