Politics
“டம்மி ஆட்சியாளர்களால் மக்கள் பல்வேறு பிரச்சினைகளைச் சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள்” - உதயநிதி பேச்சு!

சென்னை வேளச்சேரி மேற்குப் பகுதி திமுக இளைஞரணியின் துணை அமைப்பாளர் தினேஷ் - எலிசபத் மிசெல் ஆகியோரின் திருமணத்தைத் தமிழக எதிர்க்கட்சித் தலைவரும், தி.மு.க இளைஞரணிச் செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் இன்று (13.09.2026) நடத்தி வைத்தார். அதனைத் தொடர்ந்து அவர் பேசுகையில்,“இன்றைக்கு ஒரு மிக முக்கியமான காலகட்டத்தில் அடியெடுத்து வைத்துள்ளோம். திராவிட முன்னேற்றக் கழகம் இன்னும் இரண்டு நாளில் முப்பெரும் விழாவைக் கொண்டாட உள்ளது. 76வது ஆண்டுகள் நிறைவு செய்து, 77வது ஆண்டில் அடியெடுத்து வைக்கப் போகிறது திராவிட முன்னேற்றக் கழகம்.
இந்த 77 வருடங்களில் திமுக இயக்கம் எத்தனையோ வெற்றிகளையும் பார்த்திருக்கிறது; எத்தனையோ தோல்விகளையும் சந்தித்திருக்கிறது. தேர்தல் வெற்றி, தோல்விகளுக்கு எல்லாம் அப்பாற்பட்டு, எப்போதுமே மக்களோடு நிற்கும் இயக்கமாகக் கடந்த 77 வருடங்களாகத் திராவிட முன்னேற்றக் கழகம் செயல்பட்டு வருகிறது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் வெற்றி வாய்ப்பை இழந்திருக்கிறோம். ஆனால், ஒரு சிறப்பான எதிர்க்கட்சியாகவும், மக்களோடு நிற்கக்கூடிய எதிர்க்கட்சியாகவும் ஒவ்வொருவரும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம். இன்றைக்கு உள்ள டம்மி ஆட்சியாளர்களால் மக்கள் பல்வேறு பிரச்சினைகளைச் சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பிரச்சினை வந்து கொண்டிருக்கிறது.
இன்றைக்குத் தமிழ்நாட்டில் பார்த்தீர்கள் என்றால், எங்குப் பார்த்தாலும் மின்வெட்டு. சட்டம் - ஒழுங்கு எப்படி இருக்கிறது என்று நான் உங்களுக்குச் சொல்லத் தேவையில்லை. இந்த ஆட்சியில் அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலையும் ஏறிக் கொண்டே இருக்கிறது. ஆனால், இதைப் பற்றி எல்லாம் கேள்வி கேட்டால், முதலமைச்சரால் பதில் சொல்ல முடியவில்லை. பதில் சொல்ல முடியாத காரணத்தால், நம் மீதும், திமுகவின் மீதும், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் மீதும் இன்றைக்கு பல்வேறு அவதூறுகளை ஒவ்வொரு நாளும் கிளப்பிக் கொண்டிருக்கிறார்கள்” எனத் தெரிவித்தார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)