நீலகிரி வனப்பகுதியில் கடும் வறட்சி... மான்களுக்கு உணவு தட்டுப்பாடு..!

நீலகிரி மாவட்டத்தில் எல்-நினோ பாதிப்பால் தென்மேற்கு பருவமழை போதிய அளவு பெய்யாததால் கடும் வறட்சி நிலவுகிறது.
நீலகிரி மாவட்டத்தில் எல்-நினோ பாதிப்பால் தென்மேற்கு பருவமழை போதிய அளவு பெய்யாததால் கடும் வறட்சி நிலவுகிறது. இதனால் முதுமலை புலிகள் காப்பகத்தின் வெளிமண்டலப் பகுதிகளில் மான்கள் உள்ளிட்ட சிறு வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீரின்றி அவதிப்படுகின்றன. சுற்றுச்சூழல் ஆர்வலர்களும், பொதுமக்களும் வனவிலங்குகளுக்கு பசுந்தீவனம் வழங்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
நடப்பு ஆண்டில் எல்-நினோ பாதிப்பு காரணமாக நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை போதிய அளவு பெய்யவில்லை. இதன் விளைவாக மாவட்டம் முழுவதும் கடும் வறட்சி நிலவி வருகிறது. குறிப்பாக, முதுமலை புலிகள் காப்பகத்தின் வெளிமண்டலப் பகுதிகளான மாவனல்லா, மசினகுடி, மாயார், சிரியூர், சிங்காரா மற்றும் வாழைத்தோட்டம் ஆகிய பகுதிகளில் வரலாறு காணாத வறட்சி ஏற்பட்டுள்ளது.
வனப்பகுதியில் உள்ள புற்கள் அனைத்தும் காய்ந்து கருகிவிட்டன. இதனால் காட்டு யானைகள் போன்ற பெரிய வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி வேறு பகுதிகளுக்கு இடம்பெயரத் தொடங்கியுள்ளன. அதே சமயம், மான்கள் உள்ளிட்ட சிறு வனவிலங்குகள் போதிய உணவு மற்றும் தண்ணீரின்றி கடும் அவதிக்குள்ளாகி வருகின்றன.
இதையும் படிங்க: நேபாளம் சந்தித்த ஆபத்து நமக்கு அலர்ட்... சென்னை சந்திக்கப்போகும் சுற்றுச்சூழல் அபாயம்..!
வனவிலங்குகளின் பசியைப் போக்க வனத்துறையினர் வெளியில் இருந்து பசுந்தீவனங்களைக் கொண்டு வந்து வழங்க வேண்டும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். அடர் வனப்பகுதிகளுக்குள் வாழும் மான் கூட்டங்கள் தற்போது உணவு தேடி சாலை ஓரங்களிலும் உலா வருவதால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படும் சூழல் நிலவுகிறது.
நீலகிரி மலைப்பகுதிகளில் மழைப்பொழிவு அவ்வப்போது பொழிந்தாலும், மசினகுடி, கூடலூர் சமவெளிப் பகுதிகளில் அதிகமான வெப்பம் நீடிப்பதால் வனவிலங்குகள் அதிகமான சவால்களைச் சந்திக்கின்றன. அதிகமான மழை பொழிந்தால் மட்டுமே வனப்பகுதிகள் வளம் பெறும் என்றும், வனவிலங்குகளும் வாழ்வு பெறும் என்றும் பொதுமக்கள் மழைப்பொழிவிற்காகக் காத்திருக்கின்றனர்.
