Arts, culture, entertainment and media
நவம்பரில் அஜித்தின் ஆவணப்படம்... மமிதா பைஜூவின் `கோடிகள்’ சாதனை... பிரியங்கா மோகன் லைன்அப்!

தீபிகா, அலியா வரிசையில் மமிதா!
தீபிகா படுகோன், அலியா பட் வரிசையில் தற்போது மூன்றாவது நடிகையாகச் சேர்ந்திருக்கிறார் மமிதா பைஜு. அதாவது, அவர்களைப்போல் இந்த ஆண்டு 200 கோடி ரூபாயை கலெக்ஷன் செய்த படங்களில் மமிதா முக்கியப் பங்காற்றியிருக்கிறார். ‘ஜனநாயகன்’, ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’, ‘பெத்தலகேம் குடும்ப யூனிட்’ படங்களில் அவரது நடிப்பு மிகவும் பேசப்பட்டதுதான் காரணம். இந்த இளம் வயதில் இப்படியொரு சாதனையை எட்டிப் பிடித்திருக்கும் மமிதாவுக்கும் பாராட்டுகள் குவிந்துவருகின்றன.
மலையாளம், தெலுங்கில் பிஸியான பார்த்திபன்!
தற்போது ஏராளமான மலையாளப் படங்களில் நடித்துவருகிறார் பார்த்திபன். குணச்சித்திர வேடங்களும் இதில் சேர்த்தி. இவற்றில் மோகன்லாலின் மிகப்பெரிய பட்ஜெட் படமான ‘ஆபரேஷன் கங்கா’வும் அடக்கம். அதோடு, கணிசமான தெலுங்குப் படங்களும் அவர் கைவசம் இருக்கின்றன. பார்த்திபன் இப்போதெல்லாம் ஹைதராபாத்துக்கும், கொச்சினுக்குமாகப் பறந்துகொண்டேயிருக்கிறார்.
``கர்வத்தோடு சொல்கிறேன் என நீங்கள் நினைக்கலாம்..!’’
தான் இசையமைக்கும் பட விழா ஒன்றில் சமீபத்தில் இளையராஜா பேசியது, பலரையும் புருவம் உயர்த்த வைத்திருக்கிறது. “உலகிலுள்ள மிகப்பெரிய மேதைகள் எல்லோரும் சிறு வயதிலேயே பியானோவைப் பார்த்து, கற்றுக்கொண்டு வளர்ந்தவர்கள். ஆனால், நான் பியானோவைப் பார்ப்பதற்கே 27 வயதாகிவிட்டது. அதனால், நான் எல்லோரையும்விட உயர்ந்தவன் என்று சொல்ல மாட்டேன். ஆனால், இசை எனக்குள் அதுவாகவே வந்தது. எனக்குள் ஓடும் இசையின் ஜீவன் இருக்கிறதே, அது இதுவரை யாருக்கும் வந்ததில்லை; இனியும் வரப்போவதில்லை. இதை நான் கர்வத்தோடு சொல்கிறேன் என்று நீங்கள் நினைத்துக்கொள்ளலாம். ஆனால், கர்வத்தோடுதான் இதைச் சொல்ல வேண்டும்” என்று பேசியிருக்கிறார் ராஜா.
அடுத்த ரவுண்டில் பிரியங்கா மோகன்!
மீண்டும் ஒரு ரவுண்ட் வர ஆரம்பித்திருக்கிறார் பிரியங்கா மோகன். ‘மஞ்சணத்தி’ தவிர, வெற்றிமாறனின் ‘அரசன்’, ஜெய்யுடன் ஒரு படம் என அடுத்தடுத்து மூன்று படங்களில் ஒரே நேரத்தில் நடித்துவருகிறார். மூன்றுமே அடுத்த ஆண்டில் திரைக்கு வரும் என்கிறார்கள்.
கவினும் ஜென் மார்ட்டினும்... ஸ்கூல் ஃபிரெண்ட்ஸ்!
நடிகர் கவினும், இசையமைப்பாளர் ஜென் மார்ட்டினும் ஒரே ஸ்கூலில் படித்தவர்கள். அப்போதே அவர்களின் கனவு சினிமாவாக இருந்திருக்கிறது. கவினிடம் ஜென், ‘`நீ நடிகராக வருவாய். நான் இசையமைப்பாளராக வருவேன்’' என்று சொன்னதுண்டு. ஜென் மார்ட்டின் சொன்னதுபோலவே கவின் நடிகராகவும், ஜென் இசையமைப்பாளராகவும் வந்துவிட்டனர். கவினுடன் ‘டாடா’, ‘பிளடி பெக்கர்’, ‘கிஸ்’, ‘ஹாய்’ எனத் தொடர்ந்து நான்கு படங்களுக்கு இசையமைத்துவிட்டார் ஜென் மார்ட்டின்.
அஜித்தின் டாக்கு டிராமா ரெடி!
அஜித்தின் கார் ரேஸ் பற்றிய ஆவணப்படமான ‘கிளாடியேட்டர்ஸ்’ படத்தை ‘கீரிடம்’ இயக்குநர் விஜய் இயக்கியிருக்கிறார். ‘`அஜித் சார் இதை ஓர் ஆவணப்படமா இல்லாம படமாவே நினைக்கிறார். நம்ம எல்லாருக்குமே சின்ன வயசுல ஒரு கனவு இருந்திருக்கும். பலருக்கும், நம்மை விட்டுப்போன விஷயமாவும் அது இருந்திருக்கும். ஆனா, ரொம்ப வருஷக் கனவை நனவாக்கிய ஒரு மனிதரின் கதையா இந்த டாக்கு டிராமா இருக்கும்னு நம்புறேன்’’ என்கிறார் இயக்குநர் விஜய். வரும் நவம்பரில் படத்தைத் திரைக்குக்கொண்டு வருகிறார்கள்.
