Economy, business and finance
இளைஞர்கள் தொழில் தொடங்க கடனுதவிக்கு விண்ணப்பிக்கலாம்
கரூர்:இளைஞர்கள் தொழில் தொடங்க கடன் உதவிக்கு விண்ணப்பிக்கலாம் என, கலெக்டர் முத்துக்குமரன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழக அரசு பொருளாதாரத்தில் பின்தங்கி உள்ளவர்களை முன்னேற்ற, வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு, வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தில் வியாபாரம் சார்ந்த தொழில்களுக்கு அதிகபட்சமாக, 15 லட்சம் ரூபாய் வரை தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் மூலம், 25 சதவீத மானியத்துடன் (அதிகபட்சமாக ரூ.3.75 லட்சம்) நிதியுதவி வழங்கப்படும். இத்திட்டத்தின் கீழ் கடன் பெற விண்ணப்பிக்கும் பொது பிரிவினருக்கு, 18 முதல், 45 வயதுக்குள் இருக்க வேண்டும். மற்ற பிரிவுகளுக்கு, 55 வயதுக்குள் இருக்க வேண்டும்.கல்வி தகுதி குறைந்தபட்சம் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இத்திட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளின் பெற்றோர் கடன் வசதி பெறுவதற்கு கல்வி தகுதி தேவை இல்லை. www.msmeonline.tn.gov.in/uyegp என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம். இத்திட்டம் குறித்து விபரங்களுக்கு பொது மேலா ளர், மாவட்ட தொழில் மையம், சத்தியமூர்த்தி நகர், தான்தோன்றிமலை, கரூர் அலுவலகத்தை அணுகலாம். மேலும், 04324 255179 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.