Politics
காது கேளாதோருக்கான மாநில கூடைப்பந்து, கைப்பந்து போட்டி
புதுச்சேரி: காது கேளாதோருக்கான மாநில கூடைப்பந்து மற்றும் கைப்பந்து போட்டியில், நெய்வேலி மற்றும் திண்டிவனம் அணிகள் சாம்பியன் பட்டத்தை வென்றன.
புதுச்சேரி ஸ்போர்ட்ஸ் கவுன்சில் பார் தி டெப் அமைப்பின் சார்பில், காது கேளாதோருக்கான 6-வது மாநில அளவில் கைப்பந்து மற்றும் கூடைப் பந்து சாம்பியன்ஷிப் போட்டிகள், லாஸ்பேட்டை அடல் பிகாரி வாஜ்பாய் உள் விளையாட்டு அரங்கில் நடந்தது.
இதில், புதுச்சேரி மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த காது கேளாத வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். இதில், நெய்வேலி அணி முதலிடத்தையும், புதுச்சேரி அணி இரண்டாம் இடத்தையும், விழுப்புரம் அணி மூன்றாம் இடத்தையும் பிடித்தன. கைப்பந்து போட்டியில் திண்டினம் அணி முதல் இடத்தையும், விழுப்புரம் அணி இரண்டாம் இடத்தையும், புதுச்சேரி அணி மூன்றாம் இடத்தையும் பிடித்தன.
இதற்கான பரிசளிப்பு விழாவில், வழக்கறிஞர் சரவணன் வரவேற்றார். புதுச்சேரி ஸ்போர்ட்ஸ் கவுன்சில் பார் தி டெப் அமைப்பின் பொதுச் செயலாளர் பாசித் அமைப்பின் செயல்பாடுகள் குறித்து விளக்கினார். சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் சரவணன் துவக்கவுரையாற்றினர். ஐயப்பன், மதன்மோகன், அபில்லா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தலைமை விருந்தினராக, புதுச்சேரி விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை துணை இயக்குநர் வைத்திலிங்கம் வெற்றி பெற்ற அணிகளுக்கு பதக்கம், சான்றிதழ் மற்றும் கோப்பைகளை வழங்கி, பாராட்டினார்.
ஸ்கைசெர்வ் அறக்கட்டளை சரவணக்குமார், பாண்டிச்சேரி அகரம் ரோட்டரி சங்க தலைவர் பூவிழி, கற்பகம், டாக்டர் யபோலிகா ஆகியோர் வாழ்த்தி பேசினர். வழக்கறிஞர் லீலாவதி நன்றி கூறினார்.