Politics
இதே நாளில் அன்று
செப்டம்பர் 17: தெலுங்கு வணிகரான வெங்கட்ட நாயக்கர் - சின்னத்தாயம்மாள் தம்பதியின் மகனாக, ஈரோடில் 1879ல், இதே

தெலுங்கு வணிகரான வெங்கட்ட நாயக்கர் - சின்னத்தாயம்மாள் தம்பதியின் மகனாக, ஈரோடில் 1879ல், இதே நாளில் பிறந்தவர் ராமசாமி.
இவர், ஐந்தாம் வகுப்பு வரை படித்தார். தன் 19 வயதில், நாகம்மையை திருமணம் செய்தார். ஆரம்பத்தில் இறை நம்பிக்கையுடன் இருந்த இவர், காசிக்கு சென்றபோது எதிர்கொண்ட ஜாதிய பாகுபாடுகளால் நாத்திகரானார்.
ஈரோடு நகர் மன்ற தலைவரானவர், 1919ல் காங்கிரசில் சேர்ந்து, 1922ல் காங்., சென்னை மாகாண தலைவரானார். இட ஒதுக்கீடு கொள்கையை ஏற்காததால், காங்.,கில் இருந்து விலகி, 1925ல் சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கினார். பின், நீதிக்கட்சியில் இணைந்து, 1944ல் அதை திராவிடர் கழகம் என மாற்றினார்.
கலப்பு மணம், விதவை மறுமணம், பெண்களுக்கு சொத்துரிமை, தேவதாசி ஒழிப்பு உள்ளிட்டவற்றுக்காக பல போராட்டங்களை நடத்தினார். 'குடியரசு, பகுத்தறிவு' பத்திரிகைகளை நடத்தி, தமிழில் எழுத்து சீர்திருத்தத்தை வலியுறுத்தினார்.
தன் 70வது வயதில், 29 வயது மணியம்மையை மணந்ததால், அண்ணாதுரை உள்ளிட்ட ஆதரவாளர்கள் பிரிந்து, தி.மு.க.,வை உருவாக்கினர். திராவிட இயக்கத்தினரால், 'தந்தை பெரியார்' என அழைக்கப்படும் இவர், தன் 94வது வயதில், 1973, டிசம்பர் 24ல் மறைந்தார்.
சமூக நீதியையும், பகுத்தறிவையும் வலியுறுத்திய ஈ.வெ.ராமசாமியின் பிறந்த தினம் இன்று!