''இது தெரியாம போச்சே...'' காஜு கட்லி பிரியர்களுக்கு அதிரடி எச்சரிக்கை

இந்தியப் பண்டிகைகள் மற்றும் சுபநிகழ்ச்சிகள் என்றாலே நம் நினைவுக்கு வருவது நாவில் எச்சில் ஊற வைக்கும் பாரம்பரிய இனிப்பு வகைகள்தான். அதிலும் குறிப்பாக, காஜு கட்லி போன்ற விலையுயர்ந்த இனிப்புகளின் மேல் ஒட்டப்பட்டிருக்கும் பளபளப்பான வெள்ளித் தகடு அந்த இனிப்புகளுக்குத் தனி அழகையும், ராயல் அந்தஸ்தையும் கொடுக்கிறது. ஆனால், நாம் அசல் வெள்ளி என்று நினைத்து ஆசையாகச் சாப்பிடும் அந்தப் பளபளப்புத் தகடு, உண்மையில் நம் உயிரைக் குடிக்கும் விஷமாக மாற வாய்ப்புள்ளது என்று மருத்துவர்கள் தற்போது அதிரடி எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
காஜு கட்லி மற்றும் இனிப்புப் பிரியர்களின் தூக்கத்தைக் கெடுக்கும் இந்த அதிர்ச்சித் தகவல், இப்போதைய பண்டிகைக் காலத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி சர் கங்கா ராம் மருத்துவமனையின் கல்லீரல் மற்றும் இரைப்பை குடல் அழற்சி நிறுவனத்தின் தலைவர் டாக்டர் அனில் அரோரா இதுகுறித்துக் கூறுகையில், "உண்மையான வெள்ளித் தகடு என்பது 99.9% தூய்மையான வெள்ளியால், மனிதர்கள் சாப்பிடுவதற்கு உகந்த உணவுப் பாதுகாப்புத் தரத்துடன் மிக மிக மெல்லிய படலமாகத் தயாரிக்கப்படுகிறது. ஆனால், இன்றைக்குச் சந்தையில் வெள்ளித் தகடு என்ற பெயரில் விற்கப்படுபவற்றில் அலுமினியம், ஆர்சனிக் மற்றும் காட்மியம் போன்ற உடலுக்குக் கெடுதல் விளைவிக்கும் கன உலோகங்கள் பெருமளவில் கலப்படம் செய்யப்படுகின்றன.
இத்தகைய கலப்படத் தகடுகள் ஒட்டப்பட்ட இனிப்புகளை நாம் எப்போதாவது ஒருமுறை சாப்பிடுவதால் பெரிய பாதிப்பு ஏற்பட்டுவிடாது. ஆனால், தொடர்ந்து நீண்ட காலமாகவோ அல்லது அடிக்கடி ஒழுங்கற்ற முறையில் சாப்பிட்டு வரும்போது நம் உடலில் உலோக நச்சுத்தன்மை ஏற்பட்டுவிடும். இது காலப்போக்கில் நமது மூளை, சிறுநீரகம் மற்றும் கல்லீரல் போன்ற மிக முக்கியமான உள் உறுப்புகளைச் செயலிழக்கச் செய்து, உயிருக்கே ஆபத்தாய் முடியும்" என்று எச்சரித்துள்ளார்.
பொதுமக்கள் தங்களின் அன்றாட வாழ்க்கையில் அசல் வெள்ளித் தகட்டிற்கும், போலி அல்லது கலப்படத் தகட்டிற்கும் உள்ள வித்தியாசத்தை வெறும் கண்களால் பார்த்து மட்டுமே கண்டுபிடிப்பது மிகவும் கடினமான காரியம் என்று டாக்டர் அரோரா சுட்டிக்காட்டியுள்ளார். இருப்பினும், அசல் வெள்ளித் தகடு என்பது மிகவும் மெல்லியதாக, அதிக பளபளப்புடன், தொட்டாலே காற்றில் பறக்கும் அளவிற்கு மிக மிக லேசான எடையில் இருக்கும். ஆனால், அலுமினியம் கலக்கப்பட்ட போலித் தகடுகள் சற்றுத் தடிமனாகவும், லேசான கருமை நிறம் கலந்த வெளிறிய தன்மையுடனும் காட்சியளிக்கும்.
சாதாரண நுகர்வோரால் இதைக் கண்டறிய முடியாது என்பதால், இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் போன்ற அரசு அமைப்புகள் இதில் உடனடியாகத் தலையிட வேண்டும். இனிப்புக் கடைகளில் இதுபோன்ற ஆபத்தான, கலப்படத் தகடுகள் பயன்படுத்துவதைத் தடுத்து நிறுத்தக் கடுமையான சோதனைகளை நடத்த வேண்டும் என்று மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர்.
எனவே, இனிப்புப் பிரியர்களே அடுத்த முறை நீங்கள் காஜு கட்லி சாப்பிடும்போது, அதன் மேல் இருக்கும் பளபளப்பு உங்களின் ஆரோக்கியத்தைக் கெடுக்கும் அலுமினியமாக இருக்க வாய்ப்புள்ளது என்பதை நினைவில் கொண்டு, நம்பகமான கடைகளில் மட்டும் இனிப்புகளை வாங்கி விழிப்புணர்வுடன் ஆரோக்கியத்தைப் பாதுகாத்திடுங்கள்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)